ட்ரம்பின் உயரிய விருதைப் பெறவுள்ள முன்னாள் நியூயோர்க் மேயர் ரூடி ஜூலியானி!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது நீண்டகால அரசியல் ஆதரவாளரும் முன்னாள் நியூயோர்க் நகர மேயருமான ரூடி ஜூலியானிக்கு அமெரிக்காவின் உயரிய குடிமக்கள் விருதான ஜனாதிபதி சுதந்திரப் பதக்கத்தை (Presidential Medal of Freedom) வழங்கியுள்ளார்.
2026 நவம்பர் 24ஆம் திகதி வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2001 செப்டம்பர் 11ஆம் திகதி அமெரிக்காவில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் நியூயோர்க் நகரை வழிநடத்திய விதத்திற்காக ரூடி ஜூலியானி இந்த விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அந்தத் தாக்குதல்களுக்குப் பின்னர் அமெரிக்காவில் முக்கிய தேசிய அரசியல் பிரமுகராக உருவெடுத்த ஜூலியானியை, ட்ரம்ப் முன்னதாக நியூயோர்க் நகரின் சிறந்த மேயர் என்றும் சிறந்த அமெரிக்க தேசப்பற்றாளர் என்றும் பாராட்டியிருந்தார்.
எனினும், டொனால்ட் ட்ரம்பின் தனிப்பட்ட சட்ட ஆலோசகராகப் பணியாற்றிய காலத்தில், 2020ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் பல்வேறு சட்டச் சர்ச்சைகளுக்கு வழிவகுத்தன.
அந்தத் தேர்தலில் ட்ரம்ப் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக ஜூலியானி குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். ஆனால், அவர் முன்வைத்த தேர்தல் மோசடி தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளை நீதிமன்றங்கள் நிராகரித்தன.
மேலும், தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த ஜோர்ஜியா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு முன்னாள் பெண் பணியாளர்கள் தொடர்பாகத் தவறான தகவல்களைப் பரப்பிய குற்றச்சாட்டில், அவர்களுக்கு ஆதரவாக 148 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இதனையடுத்து, நியூயோர்க் மற்றும் வொஷிங்டனில் சட்டத்தரணியாகப் பணியாற்றுவதற்கான அவரது அனுமதியும் இரத்து செய்யப்பட்டிருந்தது. 82 வயதான ரூடி ஜூலியானி, இந்த விருதைப் பெற்றுக்கொள்வது தனக்குப் பெருமையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த அங்கீகாரத்திற்கான பெருமையைத் தன்னுடன் பணியாற்றியவர்கள், தன்னுடன் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் மற்றும் பல்வேறு சவால்களில் ஒன்றிணைந்து செயல்பட்டவர்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, தாங்கள் இணைந்து முன்னெடுத்த பணிகளின்போது உயிரிழந்தவர்களையும் நினைவுகூர்ந்து தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இடம்பெற்ற வாகன விபத்தில் ஜூலியானி படுகாயமடைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு இந்த விருதை வழங்கப்போவதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விருது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, தேசிய நலன்கள், உலக அமைதி மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்புகளை வழங்கியவர்களுக்கு வழங்கப்படும் உயரிய குடிமக்கள் அங்கீகாரமாகும்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.