கட்டாயத் தொழிலாளர் சுரண்டலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு: இலங்கைத் தொழிலதிபர் மலேசியாவில் கைது!
மலேசியாவின் சிலாங்கூர் (Selangor) மாநிலத்தில் உள்ள ஜெஞ்சாரோம் (Jenjarom) பகுதியில், கட்டாயத் தொழிலாளர் சுரண்டலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 38 வயது இலங்கைத் தொழிலதிபர் ஒருவரை, அந்நாட்டு குடிவரவுத் துறை கைது செய்துள்ளது.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகள் மற்றும் உளவுத் தகவல்களின் அடிப்படையில், மலேசிய குடிவரவுத் துறையின் ஆள் கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்பு மற்றும் பணமோசடி தடுப்புச் சட்ட பிரிவினர் இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கையின் போது, சுரண்டலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் இலங்கை பெண் ஒருவர் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளார்.
வேலை வாய்ப்பு மற்றும் பணி அனுமதிப்பத்திரம் பெற்றுத் தருவதாகக் கூறி, அந்தப் பெண் மலேசியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சந்தேகநபருக்குச் சொந்தமான உணவு வணிகத்தில் ஊதியம் இன்றி வேலை செய்ய அவர் வற்புறுத்தப்பட்டுள்ளார்.
அவருக்குப் போதுமான உணவு மறுக்கப்பட்டுள்ளதுடன், நடமாட்டக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும், அவர் உடல் ரீதியான துன்புறுத்தல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சோதனையின் போது, செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் அல்லது அனுமதிப்பத்திரங்கள் இல்லாத காரணத்துக்காக 21 முதல் 51 வயதுக்குட்பட்ட நான்கு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மேலும் 06 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட தொழிலதிபர், மலேசியாவின் 2007ஆம் ஆண்டின் ஆள் கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டம் மற்றும் 1959/63ஆம் ஆண்டின் குடிவரவுச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், மலேசியப் பெண் ஒருவரைத் திருமணம் செய்ததன் மூலம் நீண்டகால சமூக வருகை அனுமதிப்பத்திரம் பெற்று அங்கு வசித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழிலாளர் சுரண்டல், கட்டாய உழைப்பு மற்றும் மனிதக் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய குடிவரவுத் துறை எச்சரித்துள்ளது.