ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்து: ஐந்து பேர் உயிரிழப்பு - பிரதியமைச்சரின் அதிரடி உத்தரவு!
ஹோமாகம, கட்டுவன கைத்தொழில் பேட்டையில் உள்ள மூன்று மாடி தொழிற்சாலை ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (21) காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தீ விபத்து காலை சுமார் 9:45 மணியளவில் ஆரம்பித்து, கட்டடம் முழுவதும் வேகமாகப் பரவியது.
ஆரம்பத்தில் மூன்று பேர் மட்டுமே கட்டிடத்துக்குள் சிக்கியிருப்பதாகக் கருதப்பட்டது. எனினும், தேடுதல் நடவடிக்கைகளின் போது ஐந்து பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
மீட்கப்பட்டவர்களில் மூன்று பேரின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகியுள்ளதாக தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீ வேகமாகப் பரவியதால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக அணுகுவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் 06 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு, ஹோமாகம பொலிஸாரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கோட்டை தீயணைப்புப் படையின் பிரதான அதிகாரி தெரிவித்தார்.
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க சம்பவ இடத்தைப் பார்வையிட்டார்.
ஹோமாகம பகுதியில் அதிகளவிலான தொழிற்சாலைகள் இருந்தபோதிலும், அங்கு ஒரு பிரத்யேக தீயணைப்புப் படைப் பிரிவு இல்லாதது குறித்து அவர் தனது கவலையை வெளியிட்டார்.
இந்த தீ மீட்புப் பணிகளுக்காக தெஹிவளை, ஹொரணை மற்றும் கோட்டை மாநகர சபைகளின் தீயணைப்புப் பிரிவுகள் வரவழைக்கப்பட்டிருந்தன.
சம்பவம் தொடர்பில் உடனடியாக விரிவான விசாரணை நடத்தி, தாமதமின்றி முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு, தொழில் அமைச்சு அதிகாரிகளுக்கு தொழில் பிரதியமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, தொழிற்சாலையின் பாதுகாப்பு நடைமுறைகள், தொழிலாளர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விபத்துக்கான பின்னணி குறித்து துரித விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறும் அமைச்சின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
