பேஸ்புக்கில் வாகனம் விற்று மீண்டும் ஆயுத முனையில் கொள்ளை! ரூ.40 இலட்சம் மோசடியில் முக்கிய சந்தேகநபர் கைது

ஆரம்ப விசாரணைகளில் வெளியாகியுள்ள தகவல்களின் படி, சந்தேகநபர்கள் முதலில் முகநூல் ஊடாக வாகனங்களை விற்பனை செய்வதாக கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு வாங்குபவர்களை தொடர்புகொண்டுள்ளனர்.

பேஸ்புக்கில் வாகனம் விற்று மீண்டும் ஆயுத முனையில் கொள்ளை! ரூ.40 இலட்சம் மோசடியில் முக்கிய சந்தேகநபர் கைது
ADVERTISEMENT
ADVERTISEMENT

பேஸ்புக் தளத்தை பயன்படுத்தி வாகனங்களை விற்பனை செய்வதாக விளம்பரப்படுத்தி, பின்னர் அவற்றை திட்டமிட்டு மீண்டும் ஆயுத முனையில் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் பாரிய மோசடிச் சம்பவம் தொடர்பில் முக்கிய சந்தேகநபர் ஒருவரை, மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் யக்கல பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள், கடந்த ஜூலை 1ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் நிவாரணப் பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டது. அந்த முறைப்பாட்டில், ரூபாய் 40 இலட்சம் செலுத்தி வாங்கப்பட்ட வேன் வாகனம் ஒன்றை ஆயுதம் ஏந்திய குழுவொன்று மிரட்டி பறித்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

முறைப்பாட்டைத் தொடர்ந்து மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். அதன் போது, இந்த மோசடிச் செயலில் பெலும்மஹர, முந்துங்கொட பகுதியில் இயங்கி வந்த வாகன விற்பனை நிலையத்தின் உரிமையாளர் உட்பட சுமார் 10 பேர் தொடர்புடையவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விசாரணைகளின் அடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் 59 வயதுடைய சந்தேகநபர், யக்கல பகுதியில் வைத்து நேற்று முன்தினம் (13) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஆரம்ப விசாரணைகளில் வெளியாகியுள்ள தகவல்களின் படி, சந்தேகநபர்கள் முதலில் முகநூல் ஊடாக வாகனங்களை விற்பனை செய்வதாக கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு வாங்குபவர்களை தொடர்புகொண்டுள்ளனர். பின்னர், வாகனத்தை விற்று பணத்தை பெற்றுக்கொண்டதன் பின்னர், வாங்கிச் செல்லும் நபர்களை மறைமுகமாக பின்தொடர்ந்து, பொருத்தமான இடங்களில் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி வாகனங்களை மீண்டும் பறித்துச் சென்றுள்ளனர்.

இந்த மோசடி முறையில் பலர் ஏமாற்றப்பட்டிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இதேபோன்ற முறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மேலும் இரண்டு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அவை தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் வாகன விற்பனை நிலையத்தின் உரிமையாளர் மற்றும் ஏனைய சந்தேகநபர்கள் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலகெடிஹேன பகுதியில் அமைந்துள்ள வாகன விற்பனை நிலைய உரிமையாளரின் வீட்டில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், இரண்டு வாள்கள், இரண்டு பிஸ்டல் மெகசின்கள், மூன்று தோட்டாக்கள் மற்றும் ஜீப் வாகனம் ஒன்றும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (14) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை நாளை (16)ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த பாரிய மோசடி மற்றும் ஆயுத கொள்ளைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT