எப்பாவலையில் தாய் வெட்டிக்கொலை: தப்பிச் சென்ற சந்தேகநபர் காட்டு யானையுடன் மோதி விபத்து

எப்பாவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்மடுவ பகுதியில் 45 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையைச் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் நபர் விஷமருந்திய நிலையில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றபோது காட்டு யானையுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

எப்பாவலையில் தாய் வெட்டிக்கொலை: தப்பிச் சென்ற சந்தேகநபர் காட்டு யானையுடன் மோதி விபத்து
ADVERTISEMENT
ADVERTISEMENT

எப்பாவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்மடுவ பகுதியில் நேற்று (27) அதிகாலை 45 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் தனது வீட்டில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் மகாஇலுப்பல்லம, கல்மடுவ பகுதியைச் சேர்ந்த கயானி இரோமா திசாநாயக்க என்ற 45 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

13 வயதுடைய மகளின் தாயான இவர், தெங்கு அபிவிருத்திச் சபையின் இப்பலோகம அலுவலகத்தில் பணியாற்றி வந்துள்ளார். கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த குறித்த பெண், தனது மகளுடன் கல்மடுவ பகுதியில் வசித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, அநுராதபுரத்திலுள்ள தனியார் பாடசாலையொன்றில் கல்வி பயிலும் தனது மகளுக்குக் காலை உணவு தயாரிப்பதற்காக குறித்த பெண் அதிகாலை 4 மணியளவில் எழுந்துள்ளார்.

அப்போது வீட்டின் பின்புறத்தில் மறைந்திருந்ததாகக் கூறப்படும் சந்தேகநபர், சமையலறையிலிருந்து வெளியே வந்த பெண்ணைக் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார். இதன்போது தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் பலத்த காயங்களுக்கு உள்ளான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கொலையைத் தொடர்ந்து சந்தேகநபர் விஷமருந்திவிட்டு மோட்டார் சைக்கிளில் மகாஇலுப்பல்லம நோக்கித் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மகாஇலுப்பல்லம பல்நோக்குக் கட்டடத்திற்கு அருகில் பயணித்தபோது, அவரது மோட்டார் சைக்கிள் காட்டு யானையொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து எப்பாவலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அடகுத் தொழிலில் ஈடுபட்டு வரும் குறித்த சந்தேகநபர், மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் வெட்டுக்கத்தி ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். உயிரிழந்த பெண்ணின் வீட்டிலிருந்து சுமார் 300 மீற்றர் தொலைவிலுள்ள கால்வாயொன்றிலிருந்து குறித்த ஆயுதம் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இதற்கு முன்னரும் குறித்த பெண்ணுக்குக் கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பணக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான முரண்பாடு அல்லது இருவருக்கும் இடையில் இருந்ததாகக் கூறப்படும் தனிப்பட்ட உறவு இந்தக் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எனினும், கொலைக்கான உண்மையான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

சம்பவ இடத்தை குற்றத்தடயவியல் பொலிஸ் அதிகாரிகளும் நீதவானும் பார்வையிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எப்பாவலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT