2027 முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம்
எதிர்வரும் 2027ஆம் ஆண்டு முதல் நாட்டிலுள்ள அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான பின்னணி தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்சன தெரிவித்தார்.
நாட்டில் இதுவரை போதிய கவனம் செலுத்தப்படாதிருந்த முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தித் துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் மாகாண சபைகள் இணைந்து முன்பள்ளிகளுக்கான பொதுவான பாடத்திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், அது தொடர்பான தேவையான பயிற்சி நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், அரச சேவையை வினைத்திறனாக்குதல், கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் பொதுப் போக்குவரத்துச் சேவையை நவீனமயப்படுத்துதல் உள்ளிட்ட பல துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக இம்முறை வரவு - செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெண் தொழில்முயற்சியாண்மையை அபிவித்தி செய்வதுடன், சிறுவர்களின் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கும் இம்முறை வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்சன மேலும் தெரிவித்தார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.