கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 14 வயது சிறுவனுக்கு வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை!

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 19 வயது இளைஞரின் இதயம் தானமாக வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 14 வயது சிறுவனுக்கு வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 14 வயது சிறுவனுக்கு வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை!
AI generated image
ADVERTISEMENT
ADVERTISEMENT

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 14 வயது சிறுவனுக்கு வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 26ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சை, இதய மற்றும் மார்பு அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் அனில் அபேவிக்ரம தலைமையிலான விசேட மருத்துவக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

குறித்த சிறுவன் கடுமையான இதயச் செயலிழப்பினால் பாதிக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவசரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படாவிட்டால் இன்னும் சில நாட்களில் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, விபத்தில் சிக்கி கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயது இளைஞன் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் மற்றுமோர் உயிரைக் காப்பாற்றும் நோக்கில், இதயத்தைத் தானமாக வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இதயத்தை கம்பஹாவிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மிக விரைவாகக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்காக ஆரம்பத்தில் ஹெலிகொப்டர் மூலம் எடுத்துச் செல்லத் திட்டமிடப்பட்ட போதிலும், கம்பஹா பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் கடும் மழை காரணமாக அந்தத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதனையடுத்து, பொலிஸார் தலையிட்டு வீதி வழியாக இதயத்தைக் கொண்டு செல்வதற்கான விசேட ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். கம்பஹாவிலிருந்து கொழும்பு வரையிலான பிரதான வீதியில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி, பொலிஸ் பாதுகாப்புடன் இதயம் உரிய நேரத்தில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கடந்த 26ஆம் திகதி மாலை சுமார் 5 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இதய மாற்று அறுவை சிகிச்சை, சுமார் 07 மணித்தியாலங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து நள்ளிரவை அண்மித்த வேளையில் நிறைவடைந்துள்ளது.

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சிறுவனின் உடல்நிலை சீராக இருப்பதாக வைத்திய குழு தெரிவித்துள்ளது. 

இது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது இதய மாற்று அறுவை சிகிச்சை எனக் கூறப்படுகிறது. இதற்கு முன்னர் நாட்டின் முதலாவது இதய மாற்று அறுவை சிகிச்சை கண்டி தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT