நீர்கொழும்பு சிறைச்சாலையில் கட்டுக்கடங்காத வன்முறை: அதிகாரிகள் உட்பட 25 பேர் பலி, மீண்டும் பதற்ற நிலை

உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்த சிலரின் உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டதாக நீர்கொழும்பு வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கட்டுக்கடங்காத வன்முறை: அதிகாரிகள் உட்பட 25 பேர் பலி, மீண்டும் பதற்ற நிலை
ADVERTISEMENT
ADVERTISEMENT

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கடுமையான மோதல் மற்றும் வன்முறைச் சம்பவங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக சிறைச்சாலைக்குள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலைமையை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சிறைச்சாலை வளாகத்துக்குள் நுழைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அத்துடன், சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த வன்முறைச் சம்பவத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்த சிலரின் உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டதாக நீர்கொழும்பு வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது.

இன்றைய மோதல், கைதிகள் குழுவொன்று திட்டமிட்ட வகையில் மேற்கொண்ட தாக்குதலின் பின்னணியில் வெடித்துள்ளதாக பாதுகாப்புத் தரப்புகள் தெரிவிக்கின்றன. நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் பாதுகாப்புப் பிரிவினரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் நேற்று ஏற்பட்ட பதற்றநிலை நள்ளிரவு வரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்த போதிலும், இன்று (06) காலை மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. சுமார் 1,800க்கும் அதிகமான குறுகிய காலக் கைதிகளும் விளக்கமறியல் கைதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தச் சிறைச்சாலையில், இரண்டு கைதிகள் குழுக்களுக்கு இடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மோதல் ஆரம்பமானது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அந்த ஆரம்ப மோதலில் இரண்டு கைதிகள் உயிரிழந்ததுடன், மேலும் 34 பேர் காயமடைந்திருந்தனர். போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவலை ஒருவர் வெளிப்படுத்தியமை இந்த மோதலுக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பின்னர், சிறைச்சாலையின் ஆண் மற்றும் பெண் கைதிகளில் சிலர் கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் நான்கு கைதிகள் கீழே விழுந்து காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த பதற்றநிலையை கட்டுப்படுத்துவதற்காக நேற்று இரவு பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரும் அழைக்கப்பட்டிருந்தனர். எனினும், வன்முறையில் ஈடுபட்ட கைதிகள் சிறைச்சாலை வைத்தியசாலைக்குள் நுழைந்து மருந்துகளை கொள்ளையடித்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், சிறைச்சாலையின் உடற்பயிற்சிக் கூடத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு, அங்கிருந்த இரும்புத் தடிகள் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கைதிகள் ஆயுதங்களைக் கைப்பற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், நேற்று நள்ளிரவிலேயே சிறைச்சாலையின் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்த துப்பாக்கிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக அகற்றப்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று திங்கட்கிழமை அதிகாலை அமைதியான சூழ்நிலை காணப்பட்ட போதிலும், பின்னர் கைதிகள் மீண்டும் திட்டமிட்ட வகையில் சிறைச்சாலை அதிகாரிகளைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதிகாரிகளின் அலைபேசிகளும் பறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
சிறைச்சாலையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததற்கான எதிர்ப்பே இந்தத் தாக்குதல்களுக்கு காரணமாக இருக்கலாம் என பாதுகாப்புத் தரப்புகள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், இந்தச் சிறைச்சாலையில் பல்வேறு குற்றக் குழுக்களுடன் தொடர்புடைய 26 பாதாள உலக உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வன்முறைச் சம்பவத்திற்கு ‘கட்டுவெல்லேகம சுரேஷ்’ எனப்படும் கைதி தலைமை தாங்கியதாக பாதுகாப்புப் பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இவர் ‘கெஹெல்பத்தற பத்மே’ என்பவரின் நெருங்கிய கூட்டாளி எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்துதல், கொள்ளை, போதைப்பொருள் வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் இவர்மீது நிலுவையில் உள்ளன. மேலும், 2016 ஆம் ஆண்டு நாரம்மல பகுதியில் அமைந்திருந்த விகாரை ஒன்றில் பிக்கு ஒருவர் மற்றும் அவரது உதவியாளரைத் தாக்கி கட்டிவைத்ததுடன், தூபிக்கு சேதம் விளைவித்ததாகவும் இவர்மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகள் தொடர்பான விசாரணைகள் தற்போது நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT