தலைமன்னார் பகுதியில் கைவிடப்பட்ட 5 சிறுவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடற்படையினரால் மீட்பு
தலைமன்னார் கடற்பரப்பில் உள்ள மணல்திட்டு பகுதியில் அநாதரவாகத் தவித்துக் கொண்டிருந்த ஐந்து சிறுவர்கள் உள்ளிட்ட 11 பேருக்கு இலங்கை கடற்படையினர் இன்று சனிக்கிழமை மனிதாபிமான உதவிகளை வழங்கி மீட்டுள்ளனர்.
கடற்படையினர் இன்று அதிகாலை வழமையான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில், மணல்திட்டு பகுதியில் எட்டுப் பேர் கொண்ட குழுவொன்று தங்கியிருந்ததை முதலில் அவதானித்துள்ளனர். இக்குழுவில் நான்கு பெண்கள், ஓர் ஆண் மற்றும் 2, 11, 14 வயதுடைய மூன்று சிறுவர்கள் அடங்கியிருந்தனர். ஆபத்தான நிலையில் மணல்திட்டில் சிக்கியிருந்த அவர்களுக்கு கடற்படையினர் உடனடியாகக் குடிநீர், உணவு மற்றும் தற்காலிக தங்குமிட வசதிகளை வழங்கி உதவினர்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, இவர்கள் இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதியிலிருந்து கடல் மார்க்கமாகப் பயணித்துள்ளதாகவும், ஆட்கடத்தல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக குறித்த மணல்திட்டில் நடுக்கடலில் திட்டமிட்டு கைவிடப்பட்டிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது. அத்துடன், இவர்கள் தென்னிந்தியாவின் அனையூர் மற்றும் ஒக்கூரு அகதிகள் முகாம்களிலிருந்து நாடு திரும்பியவர்களாக இருக்கலாம் எனவும் கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.
தண்ணீர் என்று நினைத்து இரசாயனத்தை குடித்த மூன்று வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு
இதனைத் தொடர்ந்து இன்று முன்னெடுக்கப்பட்ட மற்றுமொரு ரோந்து நடவடிக்கையின் போது, தலைமன்னார் மணல்திட்டுப் பகுதியிலேயே மேலும் மூவர் தவித்துக் கொண்டிருந்த நிலையில் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டனர். இவர்களில் தந்தை ஒருவரும் அவரது 11 மற்றும் 13 வயதுடைய இரண்டு பிள்ளைகளும் அடங்குவர்.
இதன் மூலம் இன்று ஒரே நாளில் ஐந்து சிறுவர்கள், நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உட்பட மொத்தம் 11 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினரால் மீட்கப்பட்டு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட அனைத்து நபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக இலங்கை கடற்படை உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது.