சைபர் பாதுகாப்பு தொடர்பில் கொழும்பில் இந்தியா - இலங்கை சைபர் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் 

சைபர் பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு அச்சுறுத்தல்களை கூட்டாக எதிர்கொள்வது குறித்து இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான முதலாவது இருதரப்பு ஆலோசனைக் கூட்டம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

சைபர் பாதுகாப்பு தொடர்பில் கொழும்பில் இந்தியா - இலங்கை சைபர் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் 
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முதலாவது உயர்மட்ட சைபர் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் கொழும்பில் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது. சைபர் ஆளுகை, செயற்கை நுண்ணறிவு ஊடாகத் தோற்றம் பெற்றுவரும் நவீன அச்சுறுத்தல்கள், சைபர் நெருக்கடி முகாமைத்துவம் மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட முக்கிய விடயங்களில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதை மையமாகக் கொண்டு இந்தச் சந்திப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பத் துறைகளில் அதிகரித்து வரும் பரஸ்பர ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகவே இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியக் கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சஞ்சய் பாஹ்ல் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சின் சைபர் இராஜதந்திரப் பிரிவின் இணைச் செயலாளர் அமித் சுக்லா ஆகியோர் அடங்கிய இந்திய உயர்மட்டத் தூதுக்குழுவினர் பங்கேற்றிருந்தனர்.

கொழும்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியத் தூதுக்குழுவினர், டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்னவைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன் போது சைபர் பாதுகாப்பு ஆளுகைக்கான கட்டமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவால் ஏற்படக்கூடிய புதிய சவால்களை முறியடித்தல் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையில் சைபர் அச்சுறுத்தல் மதிப்பீடுகளைப் பரிமாறிக்கொள்வதுடன், இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு முன்னெடுத்து வரும் சிறந்த நடைமுறைகள், திறன் விருத்தி மற்றும் சைபர் தாக்குதல்களுக்கு உடனடிப் பதிலளிக்கும் பொறிமுறைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தொடர்ந்து, தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோவையும் இந்தியத் தூதுக்குழுவினர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். பாதுகாப்பான நிதி முறைமையையும் இலக்கமுறைப் பொருளாதாரத்தையும் பேணிப் பாதுகாக்கும் இரு நாடுகளினதும் பகிரப்பட்ட இலக்குகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில், சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பை பலப்படுத்துவது குறித்து இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.

அதேவேளை, இலங்கை கணினி அவசரப் பிரிவின் தலைவர் திலக் பத்திரகே மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி கனிஷ்க கருணாசேன ஆகியோருடனும் இந்தியப் பிரதிநிதிகள் விரிவான ஆலோசனைகளில் ஈடுபட்டனர்.

அறிவுப் பரிமாற்றம், திறன் மேம்பாடு, சைபர் நெருக்கடி முகாமைத்துவம் மற்றும் குவாண்டம் கணினிமயமாக்கல், செயற்கை நுண்ணறிவு சார்ந்த தேசிய மட்டத்திலான உத்திகளை உருவாக்குதல் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை முன்னெடுப்பது தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையே டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் கூட்டு முயற்சிகளின் ஓர் அங்கமாகவே இந்த ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளதுடன், இரு நாடுகளும் தமக்கிடையிலான சைபர் பாதுகாப்புப் பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளன. (News21)

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT