தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்களின் இறுதிக்கிரியைகள் நிறைவு
தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்களின் இறுதிக்கிரியைகள், கல்கிஸ்ஸை பொது மயானத்தில் நேற்று (14) இடம்பெற்றன. கடந்த 11ஆம் திகதி அதிகாலை 03 மணியளவில் இனந்தெரியாத நபரொருவரால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சந்தேகநபர் ஓட்டோவில் வந்து வீட்டின் கதவைத் தட்டியுள்ளதுடன், வீட்டிலிருந்தவர்கள் கதவைத் திறந்த உடனேயே வீட்டுக்குள் கைக்குண்டை வீசித் தாக்கியமை சிசிடிவி பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இத்தாக்குதலில் படுகாயமடைந்த 17 வயதான கசுன் ரஷ்மிக மற்றும் அவரது 11 வயதான சகோதரர் துமிந்த கிஹான் ஆகியோர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.
இவர்களின் 55 வயதான தந்தையின் காலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அத்துடன், தந்தை மீது எந்தவொரு குற்றப் பின்னணியும் இல்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நபரின் சகோதரரின் வீட்டை இலக்கு வைத்து நடத்தப்படவிருந்த தாக்குதல், வீடு மாறியதன் காரணமாக தவறுதலாக இங்கு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஓட்டோ பின்னர் இஹல போபே பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்பட்டுள்ளதுடன், மூன்று பொலிஸ் குழுக்கள் முன்னெடுத்த விசாரணைகளை அடுத்து தற்போது இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.