தனது பாலின அடையாளம் குறித்து வெளிப்படையாக அறிவித்த மாணவர் தலைவர் நேஹா போரா
டெல்லியின் முக்கிய மாணவர் தலைவர்களில் ஒருவரும் அகில இந்திய மாணவர் சங்கத்தின் (ஐசா - AISA) தேசியத் தலைவருமான நேஹா போரா (Neha Bora), தான் ஒரு பெண் அல்ல எனவும், 'நான்-பைனரி' (Non-binary) பாலின அடையாளத்தைக் கொண்டவர் எனவும் வெளிப்படையாக அறிவித்துள்ளார். ஊடகங்களும் பொதுவெளியும் தன்னைத் தவறான பாலினச் சொற்களைக் கொண்டு குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற பல்வேறு மாணவர் போராட்டங்கள் மற்றும் பொது நிகழ்வுகள் ஊடாகப் பரவலாக அறியப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (JNU) ஆராய்ச்சி மாணவரான நேஹா போரா, அண்மையில் வழங்கிய நேர்காணலொன்றில் தனது பாலின அடையாளம் குறித்துத் தெளிவுபடுத்தியுள்ளார்.
பல செய்தி நிறுவனங்களும் ஊடகங்களும் தன்னைத் தொடர்ந்தும் 'பெண்' என்ற பொருளில் பாலினச் சொற்களைப் பயன்படுத்தி அழைப்பது குறித்து அவர் தனது அதிருப்தியைப் பதிவு செய்ததுடன், நான்-பைனரி நபர்களுக்குரிய சரியான சொற்பிரயோகங்களைப் பயன்படுத்துவது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுவாகச் சமூகம் மனிதர்களை ஆண் மற்றும் பெண் என்ற இரு பாலினக் கட்டமைப்புக்குள் மட்டுமே பார்த்துப் பழகியுள்ள நிலையில், இவ்விரு பிரிவுகளுக்குள்ளும் முழுமையாக அடங்காத தனித்துவமான பாலின அடையாளத்தைக் கொண்டவர்களே 'நான்-பைனரி' என அழைக்கப்படுகின்றனர்.
இவர்கள் தங்களை ஒன்றுக்கு மேற்பட்ட பாலினத்தவராகவோ அல்லது குறிப்பிட்ட எந்தப் பாலின அடையாளமும் அற்றவர்களாகவோ உணர்வதுடன், இது ஒரு நபரின் உடல்ரீதியான அமைப்பைக் குறிக்காமல் அவர்களின் உளவியல் சார்ந்த பாலின அடையாள வெளிப்பாடாக அமைகின்றது.
டெல்லி அரசியலிலும் மாணவர் இயக்கங்களிலும் தீவிரமாகச் செயற்பட்டு வரும் நேஹா போரா போன்ற முக்கிய பொது ஆளுமைகள் தமது பாலின அடையாளத்தை வெளிப்படையாகப் பேசுவது, சமூகத்தில் பாலினப் பன்முகத்தன்மை குறித்த விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.