மேகதாது விவகாரம் தொடர்பில் பிரதமர் மோடியைச் சந்திக்க இன்று டெல்லி செல்லும் முதலமைச்சர் விஜய்
மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று (திங்கட்கிழமை, நவம்பர் 16) புதுடெல்லிக்குப் பயணமாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். அத்துடன், இதற்காக 5,400 ஏக்கர் நிலப்பரப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், வனத்துறையின் ஒப்புதல் கிடைத்தவுடன் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கர்நாடக முதலமைச்சரின் இக்கருத்திற்குத் தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தமது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர். மேகதாது அணை கட்டுவதற்கு இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்காத சூழலில், நீதிமன்ற உத்தரவை மீறி அணையைக் கட்டக்கூடாது என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். முன்னதாக, இவ்விவகாரம் தொடர்பில் முதலமைச்சர் விஜய் பிரதமர் மோடிக்குக் கடிதமொன்றையும் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், இன்றைய டெல்லி பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் முதலமைச்சர் விஜய், மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் ஏனைய பிரச்சினைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எழுதிய 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்' (Belonging: A Journey of Love) என்ற நூலின் உத்தியோகபூர்வ வெளியீட்டு விழா இன்று மாலை புதுடெல்லியிலுள்ள ஐ.டி.சி. மவுரியா (ITC Maurya) நட்சத்திர விடுதியில் நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கும் முதலமைச்சர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.