1983 கறுப்பு ஜூலை வன்முறைகள் குறித்து நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் விரிவான விசாரணை: விசேட தெரிவுக்குழு நியமனம்

1983 கறுப்பு ஜூலை இன வன்முறைகள் மற்றும் அவற்றின் தாக்கங்கள் குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்வதற்காக அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் 12 உறுப்பினர்களைக் கொண்ட விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

1983 கறுப்பு ஜூலை வன்முறைகள் குறித்து நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் விரிவான விசாரணை: விசேட தெரிவுக்குழு நியமனம்
AI உருவாக்கிய மாதிரிப்படம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையில் 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை இன வன்முறைகள் மற்றும் அவற்றினால் ஏற்பட்ட தாக்கங்கள் தொடர்பில் விரிவான ஆய்வை மேற்கொள்வதற்காக விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையிலான இந்தத் தெரிவுக்குழுவின் நியமனம் தொடர்பில் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (28) நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

1983ஆம் ஆண்டு இடம்பெற்ற இன வன்முறைகளின் தாக்கங்கள் தொடர்பில் விரிவான ஆய்வை மேற்கொண்டு, முழுமையான அறிக்கையொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொறுப்பு குறித்த தெரிவுக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் தேசிய சகவாழ்வையும் இன நல்லிணக்கத்தையும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான முன்மொழிவுகளையும் பரிந்துரைகளையும் இந்தக் குழு சமர்ப்பிக்கவுள்ளது.

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தலைவர் உட்பட 12 உறுப்பினர்கள் இந்த விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பிரதி அமைச்சர்களான எரங்க குணசேகர மற்றும் முனீர் முலப்பர் ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், செல்வம் அடைக்கலநாதன், ஞானமுத்து சிறிநேசன், கிருஷ்ணன் கலைச்செல்வி, தனுர திசாநாயக்க, சேன நாணயக்கார, சுரங்க ரத்நாயக்க மற்றும் ஹிருணி விஜேசிங்க ஆகியோரும் குறித்த தெரிவுக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்முறைகள் கறுப்பு ஜூலை என வரலாற்றில் பதிவாகியுள்ளன.

குறித்த வன்முறைகளின்போது ஏராளமானோர் உயிரிழந்ததுடன், பெருமளவிலான வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் தமது வாழ்விடங்களிலிருந்து இடம்பெயர வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டனர்.

கறுப்பு ஜூலை வன்முறைகள் இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டுப் போரின் முக்கிய திருப்புமுனைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.

இந்நிலையில், குறித்த வன்முறைகளின் தாக்கங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் தேசிய சகவாழ்வை வலுப்படுத்துதல் ஆகிய விடயங்கள் தொடர்பில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஆராயவுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT