பொருட்களை விற்பனை செய்யும் போது பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்க வர்த்தகர்களுக்குத் தடை!
பொருட்களை விற்பனை செய்யும் போது நுகர்வோருக்கு 'பொலித்தீன் பைகளை (sili-sili bags) இலவசமாக வழங்குவதற்கு வர்த்தகர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதியிடப்பட்ட 2456/41ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட 95ஆம் இலக்கப் பணிப்புரைக்கு அமைய, இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
நுகர்வோர் கொள்வனவு செய்யும் பொருட்களை எடுத்துச் செல்வதற்காகப் பயன்படுத்தப்படும் குறைந்த அடர்த்தி கொண்ட பொலித்தீன் (LDPE) அல்லது நேரியல் குறைந்த அடர்த்தி கொண்ட பொலித்தீன் (LLDPE) ஆகியவற்றால் தயாரிக்கப்படும் பைகளுக்கும் இந்தப் பணிப்புரை பொருந்தும் என்பதுடன், இது கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.
வர்த்தகர்கள் இவ்வாறான பொலித்தீன் பைகளை நுகர்வோருக்கு வழங்குவதாயின், அதற்குக் கட்டாயம் ஒரு தொகையை அறவிட வேண்டும் எனவும், அந்த விலையை வியாபார நிலையத்தில் நுகர்வோர் தெளிவாகப் பார்க்கக்கூடிய வகையில் காட்சிப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பொலித்தீன் பைக்காக அறவிடப்படும் கட்டணம் நுகர்வோருக்கு வழங்கப்படும் பற்றுச்சீட்டில் (Bill) தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வர்த்தகர்கள் 'சிலி சிலி' பைகளை எக்காரணம் கொண்டும் இலவசமாக வழங்கக் கூடாது எனவும், தமது வணிக நடவடிக்கைகளுக்காகப் பெறப்படும் இவ்வாறான பைகளுக்கான கொள்வனவுப் பற்றுச்சீட்டுகள், விலைப்பட்டியல்கள் (Invoices) மற்றும் விநியோகஸ்தர் விவரங்கள் ஆகியவற்றை முறையாகப் பேண வேண்டும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
வியாபார நிலையங்களில் பைகளுக்கான விலை தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும், அதற்கான தொகை பற்றுச்சீட்டில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு நுகர்வோரும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
குறித்த 95ஆம் இலக்கப் பணிப்புரையை மீறிச் செயற்படும் வர்த்தகர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள அதிகார சபை, பொலித்தீன் பாவனையைக் குறைக்கும் நோக்கில் முடிந்தவரை மீளப் பயன்படுத்தக்கூடிய பைகளைப் பயன்படுத்துமாறு, நுகர்வோரை ஊக்குவித்துள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.