அவுஸ்திரேலியாவில் 6 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கை வம்சாவளி பிக்குவுக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை

அவுஸ்திரேலியா மெல்போர்னில் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கை வம்சாவளி பௌத்த பிக்கு நாவொட்டுன்னே விஜிதவுக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் 6 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கை வம்சாவளி பிக்குவுக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை
ADVERTISEMENT
ADVERTISEMENT

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள தனது விகாரைக்கு வருகை தந்த 6 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த மூத்த பௌத்த பிக்கு ஒருவருக்கு 13 ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து, விக்டோரியா கவுண்டி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மெல்போர்னின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ‘தம்ம சரண’ பௌத்த விகாரையின் தலைமைப் பிக்குவாகச் செயற்பட்ட நாவொட்டுன்னே விஜித என்ற 71 வயதான பௌத்த மதகுருவுக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கை பௌத்த சமூகத்தினர் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றிருந்த இவருக்கு அதிர்ச்சியளிக்கும் இருண்ட மறுபக்கம் இருந்ததாகவும், பிக்குவின் இச்செயல் மக்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கு இழைக்கப்பட்ட பாரிய துரோகம் எனவும் நீதிபதி பர்தீப் திவானா தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார். 

சுயநலப் பாலியல் இச்சையைத் தீர்த்துக்கொள்வதற்காகக் குற்றமற்ற சிறுமிகளை இவர் இரையாக்கிக் கொண்டுள்ளார் என்றும் நீதிபதி கண்டனம் வெளியிட்டார்.

நீதிமன்றத்தில் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே குற்றவாளிக் கூண்டிலிருந்தவாறு பிக்கு தனது ஆதரவாளர்களைப் பார்த்துப் புன்னகைத்து கையை அசைத்ததாகவும், இதனைப் பார்த்த பாதிக்கப்பட்ட பெண்கள் கடும் அதிருப்தியையும் வேதனையையும் வெளிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட இடைவேளையின் போது சிலர் கூண்டின் அருகில் சென்று அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் எதிர்ப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து பாதுகாப்புப் பிரிவினர் தலையிட்டு, பிக்கு ஏனையவர்களுடன் தொடர்புகொள்வதைத் தடுத்தனர்.

கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, குழந்தை மீதான பாலியல் ஊடுருவல் குற்றச்சாட்டுகள் 09 மற்றும் சிறுவர் மீதான அநாகரிகமான தாக்குதல் குற்றச்சாட்டுகள் எட்டு உட்பட மொத்தம் 17 குற்றச்சாட்டுகளில் நாவொட்டுன்னே விஜித குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தார். 

1994ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஸ்ப்ரிங்வேல் மற்றும் கீஸ்பரோ ஆகிய இடங்களில் உள்ள விகாரைக்கு வழிபாட்டுக்காக வருகை தந்த சிறுமிகளே இவ்வாறு பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர்.

பெற்றோர்கள் விகாரை வளாகத்தில் இருக்கும் போதே அச்சிறுமிகளைத் தந்திரமாகத் தனது பிரத்தியேக அறைக்கு அழைத்துச் சென்று பிக்கு இக்கொடூர குற்றங்களை இழைத்துள்ளார். 

இச்சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் 2023ஆம் ஆண்டு பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து இவர் கைது செய்யப்பட்டார். இக்குற்றங்கள் பாதிக்கப்பட்ட பெண்களைப் பல தசாப்தங்களாகத் தொடர் உளவியல் பாதிப்பு, வெட்கம் மற்றும் அச்சத்தில் வாழ வைத்துள்ளதாகத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் பிறந்து தனது 15ஆவது வயதில் பௌத்த பிக்குவாக நிலைப்படுத்தப்பட்ட விஜித, பின்னர் சுவீடன் நாட்டுக்குச் சென்று அந்நாட்டுக் குடியுரிமையைப் பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் 1994 ஆம் ஆண்டு மெல்போர்ன் தம்ம சரண விகாரையின் தலைமைப் பிக்குவாகப் பொறுப்பேற்பதற்காக ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்தார். 

இவர் குறைந்தபட்சம் 9 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவித்த பின்னரே பிணையில் செல்லத் தகுதி பெறுவார் என்பதோடு, சிறைத்தண்டனைக் காலம் நிறைவடைந்ததும் அவர் சுவீடன் நாட்டுக்கு நாடு கடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Source: ABC NEWS Australia 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT