“ச.ஜோசப் விஜய் எனும் நான்” – தமிழக முதலமைச்சராக பதவியேற்றார் விஜய்
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாக, தமிழக வெற்றி்க் கழகத்தின் (TVK) தலைவர் ச. ஜோசப் விஜய், தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று ஞாயிற்றுக்கிழமை (10) காலை பதவியேற்றுக்கொண்டார்.
சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவில், ஆயிரக்கணக்கான ரசிகர்களும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டு "தளபதி" என்று உற்சாகமாக முழக்கமிட்டனர்.
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், விஜய்க்கு முதலமைச்சராகப் பதவிப்பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
கருப்பு நிற பிளேஸர் அணிந்து மேடைக்கு வந்த விஜய், “ச. ஜோசப் விஜய் என்னும் நான்...” என்று உறுதிமொழி எடுக்கத் தொடங்கியதும், அரங்கமே விசில்களாலும் கைதட்டல்களாலும் அதிர்ந்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.
விஜய்யுடன் சேர்த்து 9 அமைச்சர்களும் இன்று பதவியேற்றுக்கொண்டனர். இதில் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஜி. அருண்ராஜ், கே.ஏ.செங்கோட்டையன், பி. வெங்கடரமணன், ஆர். நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே. பிரபு மற்றும் எஸ். கீர்த்தனா ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், தமிழக வெற்றி்க் கழகம் எந்தக் கூட்டணியும் இன்றி 233 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது. பதிவான 4.9 கோடி வாக்குகளில் 1.7 கோடி வாக்குகளைப் பெற்ற அக்கட்சி, 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மைக்கு, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவை விஜய் திரட்டினார். இதனைத் தொடர்ந்து, வரும் மே 13ஆம் திகதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளின் பிடியில் இருந்த தமிழக அரசியலில், விஜய்யின் இந்த வெற்றி ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. ஊழல் மற்றும் சாதி, மத ரீதியிலான பிளவுபடுத்தும் அரசியலுக்கு எதிராகச் செயல்படப் போவதாக 2024இல் கட்சித் தொடங்கிய போதே, விஜய் உறுதியளித்திருந்தார்.
சினிமாவில் 1984 முதல் வெற்றிகரமான நாயகனாக வலம் வந்த விஜய், தற்போது தமிழகத்தின் உயரிய அரசியல் பொறுப்பை ஏற்றுள்ளதன் மூலம் சினிமா மற்றும் அரசியல் இடையேயான பிணைப்பு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விஜய்யின் இந்த வருகை தமிழக இளைஞர்களிடையே அரசியலில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
