தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம்: துமிந்த திஸாநாயக்க உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
வெள்ளவத்தை ஹவ்லொக் சிட்டி சொகுசு தொடர்மாடி குடியிருப்பில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் கசகஸ்தான் நாட்டு பெண் ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் இந்த வழக்கில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள கசகஸ்தான் நாட்டவரான ஐகுல் ஷெரகசினா (Aigul Sheragasina) ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
பிரதிவாதிகள் தரப்பில் ஆஜராக வேண்டிய ஜனாதிபதி சட்டத்தரணி சுகவீனம் காரணமாக நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாத சூழல் ஏற்பட்டதன் காரணமாக, பூர்வாங்க வழக்கு விசாரணைகளை நவம்பர் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி வெள்ளவத்தை, ஹவ்லொக் சிட்டி தொடர்மாடி குடியிருப்பில் சட்டவிரோதமான முறையில் உரிமமற்ற தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரினால் பிரதிவாதிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.