யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி சம்பவம்: கோவில் திருவிழாவில் 235 பேருக்கு கண் பாதிப்பு; லேசர் ஒளியால் விபரீதம்?

இதன் முதற்கட்டமாக, கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக சக்தி கொண்ட சீனத் தயாரிப்பு மின் விளக்குகள் சிலவற்றை பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி சம்பவம்: கோவில் திருவிழாவில் 235 பேருக்கு கண் பாதிப்பு; லேசர் ஒளியால் விபரீதம்?
ADVERTISEMENT
ADVERTISEMENT

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் கோவில் ஒன்றில் நேற்று (20) நடைபெற்ற திருவிழாவின் போது ஏற்பட்ட பெரும் கண் பாதிப்புச் சம்பவத்தில், இதுவரை 235 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்களும் பெண்களும் ஆவர். பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக விசேட பஸ் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கோவில் திருவிழாவின் போது அதிகளவில் பட்டாசுகள் மற்றும் வானவேடிக்கைகள் வெடிக்கப்பட்டதோடு, இசை நிகழ்வின் போது பயன்படுத்தப்பட்ட அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் மற்றும் அதிக ஒளிச்செறிவுடைய விளக்குகள் காரணமாகவே பலரின் கண்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கண்களில் எரிச்சல், சிவத்தல், நீர்வருதல், வலி, பார்வைக் குறைபாடு (மங்குதல்) மற்றும் கண்களைத் திறப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.

இது தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி கூறுகையில், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தாமதமின்றி சிகிச்சையளிக்கக் தேவையான விசேட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கண் சத்திரசிகிச்சை நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் தொடர்ச்சியாகச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக ஊழியர்களும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அவசரத் தேவைக்காக 60 மேலதிக படுக்கைகளுடன் கூடிய குறுகியகால தங்குமிடப் பிரிவுகள் திறக்கப்பட்டுள்ளன.

தேவையான மருந்துகள், நோயாளிகளுக்கான உணவு மற்றும் குடிநீர் வசதிகள் தாராளமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பெரும்பாலான நோயாளிகள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து இன்று மாலை அல்லது இரவுக்குள் வீடு திரும்பக்கூடிய நிலையில் இருப்பதால் பொதுமக்கள் இது குறித்து தேவையற்ற அச்சமோ பதற்றமோ கொள்ளத் தேவையில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் டொக்டர் எம். மலரவன், திருவிழாவில் கலந்துகொண்டவர்கள் தங்களது கண்களில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று பரிசோதனை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, கண்களைத் தேய்க்க வேண்டாம் எனவும், சுயமாக எந்தவொரு கண் மருந்தையும் பயன்படுத்த வேண்டாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான இச்சம்பவம் குறித்து பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதன் முதற்கட்டமாக, கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக சக்தி கொண்ட சீனத் தயாரிப்பு மின் விளக்குகள் சிலவற்றை பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்.

கையகப்படுத்தப்பட்ட இந்த மின் விளக்குகளின் மின்சக்தி அளவு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அவை அனுமதிக்கப்பட்டவையா அல்லது தடை செய்யப்பட்டவையா என்பது குறித்தும், அவற்றின் பயன்பாட்டுத் தன்மை குறித்தும் தற்போது ஆய்வுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT