வெளிநாடுகளில் இருந்து திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரச காணிகளை ஒதுக்கீடு செய்ய ஜனாதிபதி உத்தரவு

இத்திட்டத்தின் கீழ், காணிகளுடன் அவசியமான திட்ட ஆதரவு சேவைகளும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரச காணிகளை ஒதுக்கீடு செய்ய ஜனாதிபதி உத்தரவு
ADVERTISEMENT
ADVERTISEMENT

வெளிநாடுகளில் பணிபுரிந்து நாடு திரும்பும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு, அவர்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தப்படாத அரச காணிகளை வழங்குவதற்கான புதிய திட்டத்தை வகுக்குமாறு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான முன்மொழிவு கலந்துரையாடல், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (24) நடைபெற்றது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

குறித்த கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த உத்தரவை வழங்கினார். இத்திட்டத்தின் கீழ், காணிகளுடன் அவசியமான திட்ட ஆதரவு சேவைகளும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையக சமூகத்துக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் 10,000 வீடுகளைத் திட்டமிட்ட காலத்துக்குள் பூர்த்தி செய்து, தாமதமின்றி பயனாளிகளிடம் ஒப்படைக்குமாறு, ஜனாதிபதி வலியுறுத்தினார்.

தேயிலை, தேங்காய், இறப்பர், முந்திரி மற்றும் பனை உற்பத்தித் துறைகள் கடந்த ஆண்டை விட இம்முறை அதிக வளர்ச்சியையும் இலாபத்தையும் ஈட்டியுள்ளதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக எல்கடுவ, குருநாகல், சிலாபம் உள்ளிட்ட 06 அரச பெருந்தோட்ட நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க இலாபத்தைப் பதிவு செய்துள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையின் தேயிலை பயிர்ச்செய்கையில் சுமார் 60,000 ஹெக்டேயர் சிறு தேயிலை தோட்டங்களைக் கொண்டுள்ளது. 500 தேயிலை கிராமங்கள் திட்டத்தை "பிரஜாசக்தி" போன்ற கிராமிய அபிவிருத்தி திட்டங்களுடன் இணைத்து விரைவுபடுத்துமாறு, ஜனாதிபதி உத்தரவிட்டார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுமார் 15,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் முந்திரி பயிர்ச்செய்கையை விரிவாக்குவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

வெளிநாட்டு உதவிகள் மற்றும் கடன் மூலம் நிதியளிக்கப்படும் திட்டங்களில் உள்ள பலவீனங்கள் காரணமாக, சில நிதி ஒதுக்கீடுகள் பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்படுவது குறித்தும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பெருந்தோட்ட முகாமைத்துவ தேசிய நிறுவனம் (National Institute of Plantation Management) வழங்கும் பாடநெறிகளைப் பல்கலைக்கழகங்கள் ஊடாக வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் அமைச்சர்களான சமந்த வித்யாரத்ன, அனில் ஜயந்த பெர்னாண்டோ, சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் அமைச்சின் செயலாளர்கள், உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT