பிக்குகளின் ஒழுக்கக்கேடு குறித்து ஜனாதிபதி கவலை; 'தர்ம நீதிமன்றம்' நிறுவப்படும்

மகாநாயக்க தேரர்களுடன் நடத்திய கலந்துரையாடல்களின் அடிப்படையில் ஜனாதிபதி அநு குமார திசாநாயக்க முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.

பிக்குகளின் ஒழுக்கக்கேடு குறித்து ஜனாதிபதி கவலை; 'தர்ம நீதிமன்றம்' நிறுவப்படும்
ADVERTISEMENT
ADVERTISEMENT

பௌத்த துறவிகளை கைவிலங்கிட்டு நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வது மற்றும் பிக்குகளின் ஒழுக்கக்கேடு தொடர்பான விவகாரங்கள் குறித்து இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கவலை வெளியிட்டுள்ளார்.

மகாநாயக்க தேரர்களுடன் நடத்திய கலந்துரையாடல்களின் அடிப்படையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க  முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

பிக்குகள் சிலர் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவது பௌத்த தர்மத்தின் மீது பெரும் களங்கத்தை ஏற்படுத்துவதாகவும், துறவிகளை கைவிலங்கிட்டு, வரிசையாக நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வது மனவேதனையைத் தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச்சாட்டுக்கு ஆளாகும் பிக்குகளை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு முன்பாகவே, அவர்களை துறவறத்தில் இருந்து நீக்கி (Civillan) பின்னர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற கருத்தை மகாநாயக்க தேரர்கள் முன்வைத்துள்ளனர். 

ஆனால், சட்ட நடைமுறைகள் அதற்கு இடமளிக்காத காரணத்தால் அது நிறைவேறவில்லை என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பௌத்த தேரர்களின் ஒழுக்கப் பிரச்சினைகள் தொடர்பாக தீர்மானங்களை எடுப்பதற்காக, 1931ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க பெளத்த அறநிலையங்கள் கட்டளைச் சட்டம் (Buddhist Temporalities Ordinance) திருத்தப்படவுள்ளது. 

இதற்காக மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து, பிக்குகளின் ஒழுக்கத்தை மேம்படுத்தும் 'தர்ம நீதிமன்றம்' (Dharmadhikaranaya) மீண்டும் நிறுவப்படும் என்று ஜனாதிபதி அறிவித்தார்.

மாத்தறை, திஹகொட மிதெல்லவல புராதன விகாரையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அரச வெசாக் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை அறிவித்தார்.

மகாநாயக்க தேரர்களின் நீண்டகாலக் கோரிக்கைக்கு மதிப்பளித்து, 1931ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க பெளத்த அறநிலையங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கு அரசாங்கம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றது.

மகா சங்கத்தினர் ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் தர்மத்தைப் பேணிச் செல்வதை உறுதிப்படுத்துவதே இந்தத் தர்ம நீதிமன்றத்தின் பிரதான நோக்கமாகும். இதற்கான சட்டங்களை விரைவில் தயாரித்து வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் மத மறுமலர்ச்சியும் இன்றியமையாதது எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, புத்த தர்மத்தைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பு எனக் குறிப்பிட்டார்.

பௌத்த தர்மம் என்பது தேரர்களுக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கோ மாத்திரம் சொந்தமானதல்ல; அது ஒட்டுமொத்த உலக மக்களின் விமோசனத்திற்காகப் போதிக்கப்பட்டது என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.

இந்த வெசாக் விழாவானது, இலங்கை பௌத்த மறுமலர்ச்சியின் மையமான மாத்தறையை மையமாகக் கொண்டு, பௌத்த பாரம்பரியத்தின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2026 ஆம் ஆண்டு தேசிய வெசாக் விழாவை மிக விமரிசையாகக் கொண்டாடுவதற்கு இப்போதிருந்தே திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்காகச் செயலாற்றும் அனைத்து நிறுவனங்களுக்கும் ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT