கொழும்பின் 24 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு பலத்த பாதுகாப்பு! போதைப்பொருளுக்கு எதிராக பொலிஸார் அதிரடி

குறிப்பாக சில குடியிருப்புப் பகுதிகளை மையப்படுத்தி இடம்பெறும் போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், அதனால் பொதுச் சொத்துகளுக்கு ஏற்படும் சேதங்களைத் தடுப்பதற்கும் கடுமையான நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

கொழும்பின் 24 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு பலத்த பாதுகாப்பு! போதைப்பொருளுக்கு எதிராக பொலிஸார் அதிரடி
ADVERTISEMENT
ADVERTISEMENT

கொழும்பு நகரைச் சுற்றியுள்ள 24 அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதிகளின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கைப் பலப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று, கொழும்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. 

நகர்ப்புற மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் குறித்த அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்துகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் ஆலோசனை மற்றும் உத்தரவுக்கு அமைவாக, கொழும்பு பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஷாந்த டி சொய்சா தலைமையில் இக்கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் தமித் திசாநாயக்க முன்வைத்த கோரிக்கைகளை ஆராய்ந்த பொலிஸ் உயர்மட்டம், அடுக்குமாடிக் குடியிருப்புகளை அண்மித்த பொலிஸ் நிலையங்கள் ஊடாக உடனடி பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுக்கத் தீர்மானித்துள்ளது.

குறிப்பாக சில குடியிருப்புப் பகுதிகளை மையப்படுத்தி இடம்பெறும் போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், அதனால் பொதுச் சொத்துகளுக்கு ஏற்படும் சேதங்களைத் தடுப்பதற்கும் கடுமையான நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இதன் முதற்கட்டமாக குடியிருப்புகளைச் சுற்றி புதிய பொலிஸ் காவலரண்களை அமைப்பதுடன், தற்போது பயன்பாடின்றி காணப்படும் காவலரண்களைப் புனரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவரவும், தொடர்ச்சியான பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குடியிருப்பு வளாகங்களில் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ் பாரதூரமான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிவரும் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு, பொலிஸ் தரப்பினால் நன்றி தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இக்கலந்துரையாடலில் கொழும்பு மத்திய மற்றும் தெற்கு பிரிவுகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT