மத்திய வங்கியின் அதிரடி நடவடிக்கை: 11 நிறுவனங்களுக்கு ரூ. 14.6 மில்லியன் அபராதம்!
நிதிக் கொடுக்கல் - வாங்கல்கள் தொடர்பான சட்ட விதிகளைப் பின்பற்றத் தவறியமைக்காக 11 நிறுவனங்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் நிதி உளவறியும் பிரிவு (FIU) மொத்தம் 14.6 மில்லியன் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
2025 ஒக்டோபர் முதல் 2026 மார்ச் வரையிலான காலப்பகுதியில், 2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதிக் கொடுக்கல் - வாங்கல்கள் பற்றிய அறிக்கைப்படுத்தல் சட்டத்தின் (FTRA) விதிகளை மீறிய நிறுவனங்களுக்கே இந்த நிர்வாக அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
பண மோசடித் தடுப்பு மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதைக் கட்டுப்படுத்துதல் (AML/CFT) தொடர்பான இலங்கையின் ஒழுங்குமுறை அமைப்பாகச் செயற்படும் நிதி உளவறியும் பிரிவு, குறித்த சட்டத்தின் 19(1) மற்றும் 19(2) ஆகிய பிரிவுகளின் கீழ், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
குறித்த நிறுவனங்கள் மேற்கொண்ட விதிமீறல்களின் தன்மை மற்றும் அவற்றின் பாரதூரமான தன்மையைக் கருத்திற்கொண்டு இந்த அபராதத் தொகைகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
அறவிடப்பட்ட அபராதத் தொகைகள் அனைத்தும் அரசாங்கத்தின் திரட்டு நிதியத்தில் (Consolidated Fund) சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கையின் நிதியியல் அமைப்பின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கும், அறிக்கையிடும் நிறுவனங்களிடையே சட்ட விதிகளைப் பின்பற்றும் தன்மையை வலுப்படுத்துவதற்குமான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.






