பூனை துன்புறுத்தல்: சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ தொடர்பாக இருவர் கைது
அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலான பூனை துன்புறுத்தல் தொடர்பான வீடியோவுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை தலத்து ஓயா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கையின் விலங்கு நலக் கூட்டமைப்பு (Animal Welfare Coalition - AWC) அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் 18 மற்றும் 19 வயது இளைஞர்கள் ஆவர். இவர்கள் இருவரும் அத்துல்கம பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இந்தச் சம்பவம் சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு இடம்பெற்றதாக சந்தேகநபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சந்தேகநபர்கள், கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இவர்கள் மீது தண்டனைச் சட்டத்தின் பிரிவு 411, பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 63(a) மற்றும் விலங்கு வன்கொடுமை தொடர்பான சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தலத்து ஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.