பச்சை குத்தினால் கைது செய்யப்படுவீர்களா? புதிய சட்டமூலம் குறித்து நீதி அமைச்சர் விளக்கம்!

ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில், குற்றக் கும்பல் உறுப்பினர்களை அடையாளம் காண புலனாய்வாளர்கள் இத்தகைய குறிகாட்டிகளைப் பயன்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பச்சை குத்தினால் கைது செய்யப்படுவீர்களா? புதிய சட்டமூலம் குறித்து நீதி அமைச்சர் விளக்கம்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம்' (Organized Crime Prevention Bill), பச்சை குத்தியிருத்தல், நீண்ட தலைமுடி வைத்திருத்தல் அல்லது குறிப்பிட்ட பாணியிலான ஆடைகளை அணிந்திருத்தல் போன்ற காரணங்களுக்காக ஒருவரை கைது செய்ய வழிவகுக்கும் என்ற குற்றச்சாட்டுகளை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நிராகரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (20) உரையாற்றிய அமைச்சர், இந்தச் சட்டமூலம் குறித்த தவறான விளக்கங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாகவும், இது பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தை உருவாக்குவதாகவும் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் இழைக்கப்படும் குற்றங்களை விசாரணை செய்யவும், வழக்குத் தொடரவும், தடுக்கவும் புதிய சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தும் நோக்கில், இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முதன்முதலில் சமர்ப்பிக்கப்பட்டது.

பச்சை குத்தியிருத்தல் அல்லது குறிப்பிட்ட சிகை அலங்காரங்களைக் கொண்டிருத்தல் போன்ற காரணங்களுக்காக ஒருவரை சிறையில் அடைக்க முடியும் என்று சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக நானயக்கார குறிப்பிட்டார்.

"தங்களுக்கு விருப்பமான ஆடைகளை அணிவது, பச்சை குத்திக்கொள்வது அல்லது விரும்பிய சிகை அலங்காரத்தை மேற்கொள்வது போன்றவை அடிப்படை உரிமைகளாகும்" என்று அமைச்சர் கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

முன்மொழியப்பட்ட சட்டமூலத்தின் 4(2) பிரிவை விளக்கிய அமைச்சர், நபர் ஒருவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவரா என்பதைத் தீர்மானிக்கும்போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய 12 காரணிகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அவற்றில் ஒன்று, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் உறுப்பினர்களால் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆடை பாணிகள், சைகைகள், மொழி அல்லது பச்சை குத்தல்கள் தொடர்பானதாகும்.

இருப்பினும், இவை தனிப்பட்ட குற்றச் செயல்கள் அல்ல என்றும், இந்தப் பிரிவு சாதாரண நபர்களின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களில் நபர் ஒருவர் உறுப்பினராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அமைந்தது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தப் பிரிவை ஒரு "மறுக்கப்படக்கூடிய அனுமானம்" (rebuttable presumption) என்று விவரித்த அமைச்சர், இது குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான இறுதியான ஆதாரம் அல்ல என்று விளக்கினார்.

ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில், குற்றக் கும்பல் உறுப்பினர்களை அடையாளம் காண புலனாய்வாளர்கள் இத்தகைய குறிகாட்டிகளைப் பயன்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல், கொலைகள், கடத்தல்கள் மற்றும் பிற தீவிர குற்றங்களுக்கு எதிராக சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்துவதே, இந்தச் சட்டமூலத்தின் நோக்கம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்புடைய சில நடவடிக்கைகளை முறையாக விசாரணை செய்யவும், வழக்குத் தொடரவும் தற்போதுள்ள சட்டங்கள் போதாது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சட்டமூலம் குறித்த விமர்சனங்களை வரவேற்பதாகக் கூறிய அவர், நாடாளுமன்ற விவாதங்களின் போது முன்வைக்கப்படும் ஆலோசனைகளைக் கருத்தில்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது என்றார்.

மேலும், இந்தச் சட்டமூலம் அரசியலமைப்பு உரிமைகளை மீறுகிறது என்று கருதுபவர்கள், உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து சவால் விடுக்கலாம் என்றும் அவர் கூறினார்.

சில அரசியல் குழுக்களும் சமூக ஊடக விமர்சகர்களும், அரசியல் நோக்கங்களுக்காக இந்தச் சட்டமூலத்தைப் பற்றி வேண்டுமென்றே தவறான கருத்துகளைப் பரப்புகிறார்கள் என்று அவர் குற்றஞ்சாட்டினார். 

பச்சை குத்திக்கொள்வது, தலைமுடியை வளர்ப்பது அல்லது குறிப்பிட்ட வகை ஆடைகளை அணிவது போன்ற காரணங்களுக்காக மட்டும் ஒரு தனிநபர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படாது என்பதை அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்பு நிலையிலேயே உள்ளது.

இதேவேளை, முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்தில், பொலிஸாரிடம் அளிக்கப்படும் வாக்குமூலங்கள் மற்றும் பிணை வழங்குவதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்த அம்சங்கள் தொடர்பில் சட்ட நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT