மேற்காசியப் போர்: "ஆயுதங்கள் தீர்வாகாது!" - அமெரிக்காவின் 5 நாள் போர்நிறுத்த அறிவிப்புக்கு சீனா ரியாக்‌ஷன்!

ஈரான் மீதான தாக்குதல்களை 5 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தை மட்டுமே நிரந்தரத் தீர்வைத் தரும் எனச் சீனா வலியுறுத்தியுள்ளது.

மேற்காசியப் போர்: "ஆயுதங்கள் தீர்வாகாது!" - அமெரிக்காவின் 5 நாள் போர்நிறுத்த அறிவிப்புக்கு சீனா ரியாக்‌ஷன்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

கடந்த பிப்ரவரி 28-ம் திகதி முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வந்த வான்வழித் தாக்குதல்கள் உலகையே உலுக்கி வருகின்றன. ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியான இந்த மோதலில், தற்போது ஒரு முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோசியல்' வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஈரானுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதன் விளைவாக, ஈரானின் அணு உலைகள் மற்றும் எரிசக்தி மையங்கள் மீது நடத்தப்படும் ராணுவத் தாக்குதல்களை அடுத்த 5 நாட்களுக்கு ஒத்திவைக்கத் தனது பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

மத்திய கிழக்கில் நிலவும் பகைமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க இந்த வாரம் முழுவதும் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தச் சூழலில், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லின் ஜியான் பெய்ஜிங்கில் இன்று (மார்ச் 25, 2026) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மேற்காசியப் பகுதியில் நீண்டகாலமாக நீடிக்கும் இந்த மோதலால் எந்தத் தரப்பிற்கும் நன்மையில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

குறிப்பாக, எரிசக்தி விநியோகம், சர்வதேச நிதிச் சந்தை, வர்த்தகம் மற்றும் கடல்வழிப் போக்குவரத்து எனப் பல முக்கியத் துறைகள் இந்தப் போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். இது அனைத்து நாடுகளின் பொதுநலன்களுக்கும் எதிரானது என்றும், பதற்றத்தை அதிகரிக்காமல் அனைத்து தரப்பினரும் உடனடியாகப் பகைமையைக் கைவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.

எந்தவொரு சர்வதேசப் பிரச்சினைக்கும் ராணுவ பலத்தைப் பயன்படுத்துவது நிரந்தரத் தீர்வாகாது என்பதே வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம் எனச் சீனா கூறியுள்ளது. ஆயுத மோதல்கள் புதிய வெறுப்புணர்வையும், தீராத பகையையுமே வளர்க்கும் என லின் ஜியான் எச்சரித்துள்ளார். "போர்நிறுத்த ஒப்பந்தமும், வெளிப்படையான பேச்சுவார்த்தையுமே தற்போதைய நெருக்கடிக்கு ஒரே தீர்வு" எனச் சீனா தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது. 
அமெரிக்காவின் 5 நாள் போர்நிறுத்த அறிவிப்பு ஒரு நல்ல தொடக்கமாக இருந்தாலும், அது ஒரு நிரந்தர அமைதி ஒப்பந்தமாக மாற வேண்டும் என்பதே உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT