உக்ரைனின் கீவ் பிராந்தியத்தில் ரஷ்யா தீவிர தாக்குதல்; குறைந்தது 15 பேர் உயிரிழப்பு
உக்ரைனின் கீவ் பிராந்தியத்தில் ரஷ்யா நடத்திய தொடர் தாக்குதல்களில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர். பகுதியளவில் இடிந்து விழுந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகளில் மீட்புப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு ஐந்தாவது ஆண்டாகத் தொடரும் நிலையில், மற்றுமொரு குளிர்காலத்தை எதிர்கொள்ளத் தயாராகும் உக்ரைன் மீது ரஷ்யா இரவு நேரங்களில் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு வடக்கே சுமார் 45 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள டைமர் (Dymer) நகரில் உள்ள ஐந்து மாடிக் குடியிருப்புக் கட்டடத்தின் மீது இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதாகக் கீவ் பிராந்திய அதிகாரி டைமூர் த்காசெங்கோ திங்கட்கிழமை (நவம்பர் 23) தெரிவித்துள்ளார்.
இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மேலும் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தனது டெலிகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். உயிரிழந்தவர்களில் பதின்ம வயதுடைய ஒருவரும் அடங்குவதாக உக்ரைன் அரச அவசரகாலச் சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.
இடிபாடுகளுக்குள் சிக்கித் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ள இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேரை மீட்புப் பணியாளர்கள் தேடி வருகின்றனர். எனினும், 79 வயதுடைய மூதாட்டி ஒருவர் மற்றும் ஒரு குழந்தை உட்பட சிலரை இடிபாடுகளுக்குள் இருந்து மீட்புப் பணியாளர்கள் உயிருடன் மீட்டுள்ளனர்.
இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுவதால், அவர்களை உயிருடனோ அல்லது சடலமாகவோ மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, கீவ்விற்குத் தெற்கே அமைந்துள்ள விஷ்னெவ் (Vyshneve) நகரில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றின் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மூன்று சிறுவர்கள் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளதாக அந்நகர முதல்வர் இல்லியா டிகோவ் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
மளிகைப் பொருட்களை வாங்குவதற்காகச் சாதாரணமாகக் கடைக்குச் சென்ற மக்களின் பயணம், ரஷ்யாவின் தாக்குதலால் பாரிய துயரமாக மாறியுள்ளதாக டைமூர் த்காசெங்கோ வேதனை தெரிவித்துள்ளார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.