குளிர்சாதனப் பெட்டிகள் மீதான சைபர் தாக்குதல் - 'ஈரான் பொறுப்பு' - பொருளாதாரத் தடை கோரும் பிரான்ஸ்
பிரான்ஸிலுள்ள சுப்பர் மார்க்கெட்டுகளின் குளிர்சாதனப் பெட்டிகள் மீது கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட பாரிய சைபர் தாக்குதல்களுக்கு ஈரானின் புரட்சிக் காவல் பிரிவே (IRGC) காரணம் என பிரான்ஸ் குற்றம் சுமத்தியுள்ளது.
பிரான்ஸின் தேசிய நலன்களுக்கும் அந்நாட்டு மக்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலேயே, இந்த இணையத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் பிரான்ஸின் பல முக்கிய நகரங்களிலுள்ள மார்க்கெட்டுகள் இந்த இணையத் தாக்குதலுக்கு உள்ளாகின. தீவிரமான இந்தத் தாக்குதல் காரணமாகப் மார்க்கெட்டுகளின் குளிரூட்டும் கட்டமைப்புகள் முடக்கப்பட்டு, குளிர்சாதனப் பெட்டிகளின் வெப்பநிலை சடுதியாக அதிகரித்தது. இதன் விளைவாகப் பழுதடையக்கூடிய பெருமளவிலான உணவுப் பொருட்களை கடைகளின் நிர்வாகத்தினர் உடனடியாக அப்புறப்படுத்த நேரிட்டதுடன், வர்த்தக நிலையங்களுக்குப் பாரிய நட்டமும் ஏற்பட்டது.
இச்சம்பவம் பிரான்ஸ் மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பாதுகாப்பையும் சீர்குலைக்கும் பாரிய நடவடிக்கை என்று சுட்டிக்காட்டியுள்ள பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர், இதற்குப் பதிலடியாக ஈரான் மீது ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, பிரான்ஸ் முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஈரான் அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வமாக எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.