இலங்கையை மனிதநேயம் மிக்க நாடாக உலகிற்கு எடுத்துச் செல்வோம் – ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க

இளைஞர்களை போதைப்பொருள் விழுங்கி வருவது தாய்மார்களுக்கு பெரும் அச்சத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், அதனை முழுமையாக ஒழிக்க அரசாங்கம் நச்சுப் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இலங்கையை மனிதநேயம் மிக்க நாடாக உலகிற்கு எடுத்துச் செல்வோம் – ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க

இலங்கையை உலகில் மனிதநேயம் நிறைந்த நாடாக மாற்றுவதே தமது எதிர்பார்ப்பாக இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (08) நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், உலகில் எந்தவொரு யுத்தம் ஏற்பட்டாலும் மனிதநேயத்தின் கொடியை முன்னெடுத்துச் செல்லும் தேசமாக இலங்கை விளங்க வேண்டும் என்ற செய்தியை உலகிற்கு கொண்டு செல்லுவதே தமது நோக்கமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

உலகில் பல வளர்ந்த நாடுகள் இருந்தாலும், இலங்கை எத்தகைய பொருளாதார சவால்களை சந்தித்தாலும் மனிதநேயம் நிறைந்த மக்கள் வாழும் நாடாக உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அனைத்து மக்களையும் பேதமின்றி பரிவுடன் அணுகும் அரசை உருவாக்குவதில் பெண்களும் சிறுவர்களும் முக்கிய பங்கு வகிப்பதாகவும், தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் அந்த பொறுப்பை நிறைவேற்றுவதில் முக்கிய பங்களிப்பு வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். மேலும், சமீபத்திய வரலாற்றில் அதிகளவான பெண்கள் ஒன்றுகூடிய நிகழ்வாக இந்த மகளிர் தினக் கூட்டம் அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஒரு அரசாங்கம் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதை அளவிடுவதற்கான முக்கியமான அளவுகோல் அந்த நாட்டின் பெண்கள் அரசாங்கத்துடன் எவ்வளவு நம்பிக்கையுடன் நிற்கிறார்கள் என்பதுதான் எனவும், ஆயிரக்கணக்கான பெண்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருப்பது அதற்கான அடையாளமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தி பல திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், துன்பங்களையும் வேதனைகளையும் சுமந்து வாழும் பெண்களுக்கு மகிழ்ச்சியான எதிர்காலத்தை உருவாக்க அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இளைஞர்களை போதைப்பொருள் விழுங்கி வருவது தாய்மார்களுக்கு பெரும் அச்சத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், அதனை முழுமையாக ஒழிக்க அரசாங்கம் நச்சுப் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தாய்மார்களின் முக்கிய எதிர்பார்ப்பு தமது பிள்ளைகளுக்கு நல்ல கல்வி வழங்குவதாக இருப்பதாகவும், அதற்கான கல்விச் சுமையிலிருந்து பெற்றோர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அடுத்த ஆண்டு தரம் 6 முதல் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டு, பரிவுணர்வு கொண்ட குழந்தைகளை உருவாக்கும் கல்வி முறையை உருவாக்கும் திட்டம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், பெண்களுக்கு கடன் பெற சொத்து இல்லாவிட்டாலும் அரசாங்கம் உத்தரவாதம் வழங்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், பெண்களுக்கு கடனை திருப்பிச் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டால் அரசாங்கம் அதற்கான உதவியை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

நுண்நிதி கடன்களின் அதிக வட்டி காரணமாக கிராமப்புற பெண்கள் கடன் சுமையில் சிக்கியுள்ளதாகவும், சிலர் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், பெண்களை அந்த கடன் வலையிலிருந்து காப்பாற்ற புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார். அதே நேரத்தில் சலுகை வட்டியில் கடன் வழங்கும் புதிய திட்டங்களையும் அரசாங்கம் செயல்படுத்தும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பெண்களின் பாதுகாப்பிற்கான தற்போதைய சட்டங்கள் போதுமானதாக இல்லையெனில் புதிய சட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

News21 இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

Add as a preferred source on Google
சமூக வலைத்தளங்களில் பின்தொடர