சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனின் பெற்றோரைச் சந்தித்தார் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனின் பெற்றோரை, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
முன்னதாக எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்திருந்த அனோஜனின் குடும்பத்தினர், சவூதி தூதரகத்தில் கடிதம் கையளிக்கும் முயற்சி பிற்போடப்பட்ட நிலையில், ஜனாதிபதியிடமிருந்து கிடைத்த அழைப்பை ஏற்று இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.
இந்தச் சந்திப்பின்போது, அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கம் சட்ட ரீதியாகவும் இராஜதந்திர மட்டத்திலும் அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி உறுதியளித்தார். குறிப்பாக, அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு சவூதி அரசருக்கு இராஜதந்திர ரீதியில் உத்தியோகபூர்வ எழுத்துமூலக் கோரிக்கையை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும், இந்த விவகாரத்தில் மேன்முறையீடுகளைச் சமர்ப்பித்தல் உள்ளிட்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் குறித்து அனோஜனின் பெற்றோருக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், இந்த விவகாரத்தை அரசாங்கம் தொடர்ச்சியாகவும் மிக நெருக்கமாகவும் கண்காணித்து வருவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.