ஞானசார தேரரின் விடுதலைக்காக விஹாரமகாதேவி பூங்காவில் ஆட்சியாளர்களுக்கு எதிராக சூனியப் பூஜை
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டக் களத்தில், ஆட்சியாளர்களைத் தண்டிக்குமாறு கோரி விசேட பாரம்பரிய யாக வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நேற்று செவ்வாய்க்கிழமை (21) மாலை மற்றும் இரவு வேளைகளில் 'மஹசோன் சமயம' மற்றும் 'மஹசோன் பிதெனிய' பலியிடல் சடங்குகள் அங்கு விசேடமாக நடத்தப்பட்டன. சிறி சமந்தபத்ர தேரர் எனப்படும் பிட்டிதுவே சிறிதம்ம தேரரின் வழிகாட்டலின் கீழ், மாத்தறை பகுதியிலிருந்து வருகை தந்த பாரம்பரிய சடங்கு வல்லுநர்களால் இந்த சாந்தி வழிபாடுகளும் சூனியப் பூஜைகளும் முன்னெடுக்கப்பட்டன.
புத்த சாசனத்தை அழிப்பதாகக் குற்றஞ்சாட்டப்படும் தற்போதைய ஆட்சியாளர்களைத் தண்டிக்குமாறும், அவர்களின் ஆட்சிப் பலத்தை அடுத்த மூன்று மாதங்களுக்குள் தகர்த்து நாட்டில் அறநெறி சார்ந்த ஆட்சியை நிலைநாட்டுமாறும் கோரி இந்த வழிபாடுகள் இடம்பெற்றன. இதன்போது வஜிரபாணி, உத்பலவண்ண, பஜ்ஜுன்ன மற்றும் மகா வெசமுணி உள்ளிட்ட யக்ஷராஜ தேவர்களை விளித்து வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
புத்த சாசனத்தையும் காவி உடையையும் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்க யக்ஷப் படைகளை அனுப்புமாறும், பொறுப்பற்ற முறையில் செயற்படும் ஆட்சியாளர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராகத் தண்டனை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் தேவர்களிடம் இதன்போது முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு பூஜைகள் நடாத்தப்பட்டன.





எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.