ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்படும் சத்தியாகிரகப் போராட்டத்துக்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவு

ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, கொழும்பு விஹாரமஹா தேவி பூங்காவில் முன்னெடுக்கப்படும் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு எதிராக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்படும் சத்தியாகிரகப் போராட்டத்துக்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவு
ADVERTISEMENT
ADVERTISEMENT

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கொழும்பு விஹாரமஹா தேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாகிரகப் போராட்டத்துக்கு எதிராக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது. கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்ததன் பின்னரே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவானது போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் உலப்பனே சுமங்கல தேரர், பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குகள், சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அனைவருக்கும் பொருந்தும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. விஹாரமஹா தேவி பூங்காவின் புத்தர் சிலைக்கு அருகிலுள்ள வளாகம், நடைபாதைகள் மற்றும் அதனைச் சூழவுள்ள எஃப்.ஆர். சேனாநாயக்க மாவத்தை, லிப்டன் சுற்றுவட்டம், சொய்சா சுற்றுவட்டம், தர்மபால மாவத்தை, கன்னங்கர மாவத்தை, கிரீன் பாத் மற்றும் ப்ளவர் வீதி உள்ளிட்ட பிரதான வீதிகளை மறித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதைத் தவிர்க்குமாறு, பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்துடன், ப்ளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாகவோ அல்லது விஹாரமஹா தேவி பூங்காவின் புத்தர் சிலையைச் சுற்றியுள்ள பகுதியிலோ தொடர்ந்து தங்கியிருக்கக் கூடாது எனவும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு எந்தவித சேதமும் விளைவிக்கக் கூடாது எனவும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் 106(1) பிரிவின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அதன் 106(3) பிரிவின் பிரகாரம் குறித்த உத்தரவை நடைமுறைப்படுத்தும் முழு அதிகாரமும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நீதிமன்றக் கட்டளையை மீறிச் செயற்படுவது இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் 185ஆம் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT