நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை நீட்டிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (19) உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்த விவகாரத்தில் 100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று முற்பகல் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார மற்றும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவிந்திர பெர்னாண்டோ ஆகியோரின் சமர்ப்பிப்புகளைக் கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம பரிசீலித்தார்.
இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதவான், நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், அன்றைய தினமே அவரது பிணை மனு மீதான தீர்ப்பு அறிவிக்கப்படும் எனவும் அறிவித்தார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.