யாழ் – கொழும்பு ரயில் சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை: ஆளுநர் செயலகத்தில் உயர்மட்ட கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையிலான ரயில் சேவைகளை அதிகரித்தல், நேர அட்டவணை மாற்றம், உட்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக வடக்கு ஆளுநர் செயலகத்தில் உயர்மட்ட கலந்துரையாடல் நடைபெற்றது.

யாழ் – கொழும்பு ரயில் சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை: ஆளுநர் செயலகத்தில் உயர்மட்ட கலந்துரையாடல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு இடையிலான ரயில் சேவைகளை மேம்படுத்துவது தொடர்பான முக்கிய உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று சனிக்கிழமை (20) காலை நடைபெற்றுள்ளது.

பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு ரயில் சேவைகளை அதிகரித்தல், தற்போதைய நேர அட்டவணைகளை மாற்றியமைத்தல் மற்றும் ரயில் போக்குவரத்து உட்கட்டமைப்பில் காணப்படும் சிக்கல்களுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட விடயங்கள் இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ. சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், இலங்கை ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் உள்ளிட்ட பல்வேறு துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வடக்கு மாகாணத்திற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதுடன், பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்து தேவையும் அதிகரித்துள்ளதால், யாழ்ப்பாணம் – கொழும்பு ரயில் சேவைகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த ரயில்வே அதிகாரிகள், ரயில் இயந்திரங்களின் பற்றாக்குறை காரணமாக சேவைகளை முழுமையாக அதிகரிப்பதில் சவால்கள் காணப்படுவதாக தெரிவித்தனர். இருப்பினும் புதிய இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இடைக்காலமாக கூடுதல் சேவைகளை வழங்குவது குறித்து ஆராயப்படும் என்றும் குறிப்பிட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், ‘யாழ். ராணி’ ரயில் சேவையில் மாற்றங்களை மேற்கொண்டு அதனை வவுனியா வரை நீடிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அதேவேளை தற்போது அநுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ள சரக்கு ரயில் சேவையை காங்கேசன்துறை வரை நீடிப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் பஸ் மற்றும் ரயில் சேவைகளை ஒருங்கிணைக்கும் பன்முக போக்குவரத்து மையங்களை அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதன் முதல் கட்டமாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் இவ்வாறான மையங்களை அமைக்கும் சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.

ரயில் பாதைகளுடன் தொடர்புடைய பாதுகாப்பற்ற கடவைகள், பயன்படுத்தப்படாத காணிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்து பிரச்சினைகள் தொடர்பிலும் அதிகாரிகள் கவனம் செலுத்தினர்.

‘டித்வா’ பேரிடரால் பாதிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட சில ரயில் சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக மடு திருவிழாவுக்கு முன்னதாக சேவையை மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடக்கு மாகாணத்தின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தி, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கான திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT