கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயத்தினால் கற்றல் உபகரணங்கள் கையளிப்பு
கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயத்தினால் நுவரெலியா, கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்திற்குக் கற்றல் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு புதன்கிழமை பாடசாலையில் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் எஸ். ஜெகதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகர் வி. சரண்யா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மேசைகள், கதிரைகள் மற்றும் ஸ்மார்ட் பலகைகள் உள்ளிட்ட கற்றல் வளங்களைக் கையளித்தார்.
இந்நிகழ்வில் விசேட அதிதியாக நுவரெலியா கல்விப் பணிமனையின் பிரதி கல்விப் பணிப்பாளர் கணேஷ்ராஜ் கலந்துகொண்டார். அத்துடன், சிரேஷ்ட ஊடகவியலாளர் பானா தங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.
எதிர்காலத் தலைமுறையினரை வலுவூட்டும் நோக்கில் வழங்கப்பட்டுள்ள இந்த நவீன கற்றல் உபகரணங்கள் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் எனத் தெரிவித்த பாடசாலைச் சமூகம், தொடர்ச்சியான ஆதரவை வழங்கி வரும் இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயத்திற்குத் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டது.
கொட்டகலை நிருபர்


எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.