இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர் பாதங்களில் தேங்காய் எண்ணெய் தடவுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர் பாதங்களில் தேங்காய் எண்ணெய் தடவி மென்மையாக மசாஜ் செய்வது, பாதங்களின் ஆரோக்கியத்திற்கும் ஒட்டுமொத்த உடல் நலத்திற்கும் பல்வேறு நன்மைகளை வழங்குகின்றது. சமையல் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கு அப்பால், தேங்காய் எண்ணெயில் காணப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு, ஈரப்பதமூட்டும் மற்றும் குணப்படுத்தும் பண்புகள் சருமத்தின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்துகின்றன.
குளிர்காலங்களில் போதிய பராமரிப்பு இன்மையால் பாதங்களில் ஈரப்பதம் குறைந்து குதிகால் வெடிப்பு மற்றும் நகங்கள் பலவீனமடைதல் போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன. தேங்காய் எண்ணெயிலுள்ள விற்றமின் ஈ (Vitamin E) மற்றும் இயற்கையான புரதச்சத்துக்கள் சேதமடைந்த சருமக் கலங்களைச் சீரமைப்பதுடன், சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைத்து குதிகால் வெடிப்பைத் தடுத்து பாதங்களை மென்மையாக வைத்திருக்க உதவுகின்றன.
தொடர்ச்சியாக தேங்காய் எண்ணெயைப் பாதங்களில் தடவுவதன் ஊடாக பாதங்களில் ஏற்படும் புண்கள், கெட்டியான தோல் மற்றும் நகங்கள் தோலுக்குள் வளர்வது போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். கால் நகங்களில் தேங்காய் எண்ணெய் தடவி குறைந்தது ஐந்து நிமிடங்களுக்கு மென்மையாக மசாஜ் செய்வதன் மூலம் நகங்கள் பளபளப்பாகவும் வலிமையாகவும் மாறும்.

அத்துடன், தேங்காய் எண்ணெய் கொண்டு பாதங்களை மசாஜ் செய்வது பாதங்களைச் சுற்றியுள்ள தசைகளை வலிமையாக்கி, அவற்றை அதிக நெகிழ்வுத்தன்மையுடன் வைத்திருக்கவும், கணுக்கால் மற்றும் குதிகால் வலியைக் குறைக்கவும் உதவுகின்றது. மேலும், இதிலுள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள் படர்தாமரை, எக்ஸிமா (Eczema), நகப் பூஞ்சை மற்றும் சருமச் சிவத்தல் போன்ற தொற்றுகளிலிருந்து பாதங்களைப் பாதுகாப்பதுடன், பாதங்கள் மற்றும் காலணிகளில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களையும் கட்டுப்படுத்துகின்றன.
இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர் பாதங்களில் தேங்காய் எண்ணெய் தடவி மசாஜ் செய்வது மன அழுத்தத்தைக் குறைத்து தூக்கத்தின் தரத்தையும் கால அளவையும் அதிகரிக்கின்றது. பரபரப்பான வாழ்க்கை முறையில் உடல் இயக்கம் குறைவடைந்து இரத்த ஓட்டம் பாதிக்கப்படும் நிலையில், தினமும் இரவு 5 முதல் 10 நிமிடங்கள் வரை தேங்காய் எண்ணெயால் பாதங்களை மசாஜ் செய்வது உடலின் இரத்த ஓட்ட மண்டலத்தைச் சீராகப் பேணவும் பெரிதும் உதவுகின்றது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.