நயினாதீவு கடலில் விபத்து: சிறிய படகில் பயணித்த பாடசாலை அதிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

அந்த நேரத்தில் கடற்பரப்பில் பலத்த காற்றுடன் கடும் அலைகள் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. படகு நடுக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென எழுந்த பெரிய அலையில் சிக்கி கடுமையாக ஆடியுள்ளது.

நயினாதீவு கடலில் விபத்து: சிறிய படகில் பயணித்த பாடசாலை அதிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

யாழ்ப்பாணம் - நயினாதீவு கடற்பரப்பில் சிறிய ரகப் படகில் பயணித்தபோது ஏற்பட்ட திடீர் விபத்தில் பாடசாலை அதிபர் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

நயினாதீவைச் சேர்ந்தவரும், நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகா வித்தியாலயத்தின் அதிபருமான நடராசா மயூரன் (வயது 48) என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், அண்மையில் புங்குடுதீவிலிருந்து இடமாற்றம் பெற்று நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகா வித்தியாலயத்தின் அதிபராகப் பொறுப்பேற்றிருந்தார். 

நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், உயிரிழந்த அதிபரும் அவருடன் பணியாற்றும் மற்றொரு ஆசிரியரும் நயினாதீவிலிருந்து குறிகட்டுவான் நோக்கிப் பயணிக்க பயணிகள் படகு சேவை நிலையத்துக்குச் சென்றுள்ளனர்.

அவர்கள் வழக்கமான பயணிகள் படகைத் தவறவிட்டதால், அவசரமாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதையடுத்து, அங்கிருந்த கடற்றொழிலாளி ஒருவரின் சிறிய படகில் பயணித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அந்த நேரத்தில் கடற்பரப்பில் பலத்த காற்றுடன் கடும் அலைகள் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. படகு நடுக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென எழுந்த பெரிய அலையில் சிக்கி கடுமையாக ஆடியுள்ளது.

இதனால் சமநிலையை இழந்த அதிபர் கடலில் தூக்கி வீசப்பட்டுள்ளார். உடனடியாக படகோட்டி அவரை மீட்க முயற்சித்த போதிலும், அதற்குள் அவர் அதிகளவு கடல் நீரை உட்கொண்ட நிலையில் நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட அவர், நயினாதீவு பிரதேச மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதிபரின் சடலம், தற்போது நயினாதீவு பிரதேச மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT