இலங்கையை உலுக்கும் சீரற்ற வானிலை: ஆறுகள் பெருக்கெடுப்பு, வெள்ள எச்சரிக்கை, போக்குவரத்து முடக்கம்!

களனி கங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் பெருவெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இலங்கையை உலுக்கும் சீரற்ற வானிலை: ஆறுகள் பெருக்கெடுப்பு, வெள்ள எச்சரிக்கை, போக்குவரத்து முடக்கம்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. 

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதுடன், மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஆறுகள் பெருக்கெடுப்பு

மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களுக்குப் பெருவெள்ள அபாயம் குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உடுநுவர, உடபலாத, யடிநுவர, பேராதனை மற்றும் கடுகஸ்தோட்டை போன்ற பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர். 

இதேவேளை, களனி கங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் பெருவெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

வெள்ளப் பாதிப்பு

தொடரும் மழையுடனான வானிலையால் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று (03) பிற்பகல் 03 மணிக்குத் திறக்கப்பட்டன. இதன் காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்து நாவலப்பிட்டி, கம்பளை மற்றும் பேராதனை பகுதிகளில் சிறு வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. 

டிக்கோயா கால்வாய் பெருக்கெடுத்தமையால் அதன் இருமருங்கிலும் உள்ள பல வீடுகள் ஏற்கெனவே நீரில் மூழ்கியுள்ளன. மேலும், நாவலப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

போக்குவரத்து முடக்கம்

கடுமையான மழை மற்றும் மண் சரிவு காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து தியகல பகுதியில் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மண்மேடுகளும் பாறைகளும் வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளமையினால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 
அத்துடன், கண்டி - கொழும்பு பிரதான வீதியின் கடுகன்னாவை பகுதியும் மூடப்பட்டுள்ளதால், வாகனச் சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

அவசர உதவிகள்

வெள்ள அபாயம் நிலவும் பகுதிகளுக்கு முப்படையினரும் பொலிஸாரும் பாதுகாப்புப் பணிகளுக்காக அனுப்பப்பட்டுள்ளனர். 

பொதுமக்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் அல்லது அவசர நிலைகளை எதிர்கொண்டால், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

மழையுடன் கூடிய வானிலை தொடர்வதால், ஆற்றோரங்களில் வசிக்கும் மக்களும் வாகன சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT