16,000 பல்கலைக்கழக மாணவர்களுக்குப் புதிய விடுதி வசதிகள்: கல்வி அமைச்சின் பாரிய திட்டம்
நாடு முழுவதிலும் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பயிலும் சுமார் 16,000 மாணவர்களின் தங்குமிட வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு 55 புதிய தங்கும் விடுதித் திட்டங்களை ஆரம்பித்துள்ளது.
இந்தத் திட்டம் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும். இதில் 13 பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய உயர்கல்வி நிறுவனங்களில் புதிய விடுதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
சப்ரகமுவ மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகங்களுக்கு தலா ஏழு விடுதித் திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் தலா 2,200 மாணவர்கள் தங்குமிட வசதி பெறுவர்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு 2,000 மாணவர்களுக்காக ஆறு விடுதிகளும், கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் ஊவா வெல்லச பல்கலைக்கழகங்களுக்கு முறையே 1,600 மற்றும் 1,800 மாணவர்களுக்கான வசதிகளும் வழங்கப்படவுள்ளன.
ஸ்ரீ ஜயவர்தனபுர, வவுனியா, வயம்ப, யாழ்ப்பாணம், மொரட்டுவ, ருஹுண, கம்பஹா விக்கிரமாராச்சி பல்கலைக்கழகங்கள் மற்றும் திருகோணமலை வளாகம் ஆகிய இடங்களிலும் புதிய விடுதித் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
பெரும்பாலான திட்டங்கள் தற்போது கேள்விப்பத்திரம் கோருதல் (Tendering), மதிப்பீடு செய்தல் அல்லது கொள்முதல் மட்டத்தில் உள்ளன. இருப்பினும், ருஹுண பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில குறிப்பிட்ட இடங்களில் ஆரம்பகட்ட கட்டுமானப் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன.
