யாழ். பல்கலைக்கழக மாணவர் மோதல்: 21 பேர் விளக்கமறியலில்; உள்ளக விசாரணையும் ஆரம்பம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பீட மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 மாணவர்களை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 21 மாணவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த மோதலுடன் தொடர்புடைய மேலும் பல மாணவர்களைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 19ஆம் திகதி இரவு, பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த தனியார் விடுதியொன்றிற்குள் முகாமைத்துவப் பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவ குழுக்களுக்கு இடையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு மேலதிகமாக, பல்கலைக்கழக நிர்வாகமும் இச்சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி தெரிவித்துள்ளார்.
குறித்த மோதல் பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியே இடம்பெற்ற போதிலும், பொலிஸார் முன்னெடுக்கும் அனைத்து விசாரணை நடவடிக்கைகளுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் எனத் துணைவேந்தர் குறிப்பிட்டார். மேலும், இம்மோதலுக்கான காரணங்களைக் கண்டறிந்து, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.