கண்கள் சிவந்த டிரம்ப்.. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு உலக நாடுகளுக்கு டிரம்பின் புதிய எச்சரிக்கை

அமெரிக்க உச்ச நீதிமன்றம்  அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரிகளை செல்லாது என்று தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, உலக வர்த்தக அரங்கில் புதிய பதற்ற நிலை உருவாகியுள்ளது.

கண்கள் சிவந்த டிரம்ப்.. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு உலக நாடுகளுக்கு டிரம்பின் புதிய எச்சரிக்கை
ADVERTISEMENT
ADVERTISEMENT

அமெரிக்க உச்ச நீதிமன்றம்  அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரிகளை செல்லாது என்று தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, உலக வர்த்தக அரங்கில் புதிய பதற்ற நிலை உருவாகியுள்ளது. இந்த தீர்ப்புக்குப் பிறகு அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்ய பல நாடுகள் தங்களது நடவடிக்கைகளை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளன. இதற்கு பதிலளித்த டிரம்ப், அமெரிக்காவுடன் ஒப்பந்தங்களில் தாமதம் செய்யும் நாடுகள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு டிரம்ப் பல நாடுகள் மீது அதிகளவிலான இறக்குமதி வரிகளை விதித்திருந்தார். இந்தியா, கனடா, மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல முக்கிய வர்த்தக கூட்டாளிகள் இந்த வரிகளால் பாதிக்கப்பட்டனர். சர்வதேச வர்த்தகத்தில் குழப்ப நிலை உருவானாலும், அமெரிக்காவுடன் புதிய வர்த்தக உடன்படிக்கைகள் மேற்கொண்டால் மட்டுமே வரி தளர்வு வழங்கப்படும் என்ற தனது நிலைப்பாட்டில் டிரம்ப் உறுதியுடன் இருந்தார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதன் விளைவாக பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடைக்கால ஒப்பந்தங்களுக்கு முன்வந்தன. இந்தியாவுடனும் வர்த்தக பேச்சுவார்த்தைகள் முன்னேறி வந்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில் ஒரு முக்கிய அறிவிப்பும் வெளியானது.

இந்நிலையில், அமெரிக்க உச்ச நீதிமன்றம் டிரம்ப் தனிப்பட்ட முறையில் வரி அறிவிக்கும் அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு டிரம்ப்க்கு பின்னடைவை ஏற்படுத்தியதாகக் கருதப்படுகிறது. இதையடுத்து ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கையை ஒத்திவைத்துள்ளது. 

இந்தியாவும் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய அமெரிக்கா செல்ல இருந்த அதிகாரிகள் குழுவின் பயணத்தை நிறுத்தியுள்ளது. தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் நீதிமன்றத் தீர்ப்பை ஆய்வு செய்து பின்னர் முடிவு எடுப்பதாக தெரிவித்துள்ளன. மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம் போன்ற நாடுகளும் தங்களது முடிவுகளை தள்ளி வைத்துள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த சூழலில், டிரம்ப் தனது சமூக வலைதளமான Truth Social-ல் கடும் எச்சரிக்கை பதிவுகளை வெளியிட்டார். பல ஆண்டுகளாக அமெரிக்காவுக்கு அதிக வரி விதித்து வந்த நாடுகள், நீதிமன்றத் தீர்ப்பை காரணமாக்கி ஒப்பந்தங்களில் தாமதம் செய்ய முயன்றால், முன்பு அறிவித்ததை விட அதிக வரிகள் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அதைவிட கடுமையான பொருளாதார விளைவுகளையும் சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.

சர்வதேச அவசரக்காலப் பொருளாதார அதிகாரச் சட்டமான IEEPA கீழ் விதிக்கப்பட்ட வரிகள் ரத்து செய்யப்பட்டாலும், பிற வர்த்தகச் சட்டங்களை பயன்படுத்தி மீண்டும் வரி விதிக்க முடியும் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யாத நாடுகளுக்கு லைசென்ஸ் முறை கொண்டு வந்து தனி கட்டணம் வசூலிக்கும் திட்டத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது அமெரிக்காவின் பாரம்பரிய சுதந்திர வர்த்தகக் கொள்கைக்கு முரணானதாக பார்க்கப்படுகிறது.

மேலும், 1974 ஆம் ஆண்டின் Trade Act பிரிவு 122 கீழ் டிரம்ப் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி 10% தற்காலிக இறக்குமதி வரியை அறிவித்தார். அதனை மறுநாள் 15% ஆக உயர்த்தினார். இந்த 15% இறக்குமதி வரி இன்று முதல் அமலுக்கு வந்து 150 நாட்கள் வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் உலக வர்த்தகத்தில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT