வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது
இலங்கைக்கு வடகிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த தாழ்வு மண்டலம் நேற்று (15) இரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடகிழக்காக சுமார் 640 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்தது. இது இலங்கையிலிருந்து தொடர்ந்தும் விலகிச் சென்று, இன்று (16) மாலையளவில் தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் சூறாவளியாக வலுவடைய அதிக வாய்ப்புள்ளதாகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், எதிர்வரும் நவம்பர் 17 ஆம் திகதியளவில் மத்திய மேற்கு வங்காள விரிகுடாவில் இது தீவிர சூறாவளியாக மாற்றமடையக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை இன்று முதல் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், அதிகாலை வேளைகளில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.