வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஆண் தாதியருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை
பிரித்தானியாவின் போர்ன்மவுத் றோயல் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண் நோயாளி ஒருவருக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் மற்றும் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டின் பேரில், 38 வயதான ஆண் தாதியர் ஒருவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போர்ன்மவுத் கிரவுன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சர்ரே மாகாணத்தின் மெர்ஸ்தாம் பகுதியைச் சேர்ந்த ஏர்னஸ்ட் பால் குரூஸ் என்பவரே இவ்வாறு சிறைத் தண்டனைக்கு உள்ளாகியுள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் திகதி அதிகாலை வேளையில் உடல்நலக்குறைவு காரணமாக 30 வயதுடைய பெண் ஒருவர் அவசர சிகிச்சைக்காக போர்ன்மவுத் றோயல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் ஆரம்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தனி அறையொன்றுக்கு மாற்றப்பட்டார்.
குறித்த அறையில் பெண் நோயாளி தனிமையில் இருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய தாதியர் ஏர்னஸ்ட் குரூஸ், உடைகளை மாற்ற வேண்டும் எனக் கூறி அவருக்கு உதவுவது போன்று நடித்து பாலியல் ரீதியான அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் மறுநாள் காலையில் அங்கிருந்த பெண் தாதியொருவரிடம் தெரிவித்ததையடுத்து, டோசெட் பொலிஸாருக்கு உடனடியாக முறைப்பாடு செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கின் போது பாதிக்கப்பட்ட பெண் துணிச்சலுடன் முன்னிலையாகி சாட்சியமளித்ததைத் தொடர்ந்து, ஏர்னஸ்ட் குரூஸ் குற்றவாளி என உறுதிப்படுத்தப்பட்டது. அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன், பாலியல் தீங்கு தடுப்பு உத்தரவு மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணை அச்சுறுத்தாத வகையிலான தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு, பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டிலும் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
உடல்நலக்குறைவினால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு வந்த பெண்ணின் நிலையைத் தவறாகப் பயன்படுத்தி இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு எதிராக முன்வந்து சாட்சியமளித்த பெண்ணின் துணிச்சலை பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் பாராட்டியுள்ளதுடன், இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் டோசெட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.