சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக இரண்டாவது தடவையாகவும் ஏகமனதாகத் தெரிவானார் ஜெய் ஷா
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) தலைவராக ஜெய் ஷா இரண்டாவது தடவையாகவும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பணிப்பாளர் சபைக் கூட்டத்தின் போது, பணிப்பாளர்களால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் விளையாட்டின் உலகளாவிய விரிவாக்கம், இரசிகர்களின் ஈர்ப்பை அதிகரித்தல் மற்றும் வணிக ரீதியான அபிவிருத்தி ஆகியவற்றை முன்னிலைப்படுத்திய எதிர்காலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஜெய் ஷாவின் தலைமைத்துவம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவது அவசியம் என சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பணிப்பாளர் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், 2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் கிரிக்கெட் போட்டி மீண்டும் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், இதன் ஊடாகப் புதிய இரசிகர் பட்டாளத்தைக் கவரவும், புதிய தலைமுறை வீரர்களை உருவாக்கவும் வாய்ப்புக் கிடைக்கும் என அப்பேரவை தெரிவித்துள்ளது.

மகளிர் கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சி, இணை உறுப்பு நாடுகளுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குதல், சர்வதேச கிரிக்கெட்டின் நம்பகத்தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் விளையாட்டின் நீண்டகால இருப்பிற்காக நிலையான வணிக வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகிய விடயங்கள் குறித்து எதிர்வரும் காலங்களில் அதிக கவனம் செலுத்தப்படும் எனப் பணிப்பாளர் சபை வலியுறுத்தியுள்ளது.
மீண்டும் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டமை குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஜெய் ஷா, தன் மீது நம்பிக்கை வைத்த பணிப்பாளர் சபைக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டு தற்போது அதன் வரலாற்றில் மிகவும் முக்கியமானதும் உற்சாகமானதுமான காலகட்டத்தில் பிரவேசித்துள்ளதாகவும், 2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் விழாவில் கிரிக்கெட் இணைக்கப்பட்டுள்ளமை உலகெங்கிலும் உள்ள புதிய இரசிகர்களுக்கு இவ்விளையாட்டை அறிமுகப்படுத்தக் கிடைத்த தனித்துவமான சந்தர்ப்பம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கிரிக்கெட்டின் எதிர்காலத்தை மேலும் பலமானதாகவும் நிலையானதாகவும் மாற்றுவதற்கு உறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும் ஜெய் ஷா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.