நவம்பர் 30 முதல் இந்திய நாடாளுமன்றக் கூட்டத்தொடர்: மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டு மசோதாக்கள் மீண்டும் தாக்கலாகுமா?
இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி திங்கட்கிழமையும், மாநிலங்களவை டிசம்பர் 2ஆம் திகதி புதன்கிழமையும் மீண்டும் கூடவுள்ளன.
அரசாங்கத்தின் முக்கிய அலுவல்களை முன்னெடுக்கும் நோக்கில் இரு அவைகளையும் மீண்டும் கூட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
அலுவல்களின் தேவைக்கேற்ப இரு அவைகளின் அமர்வுகளும் டிசம்பர் 3ஆம் திகதி நிறைவடையக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் மீண்டும் அரசியல் கவனத்தைப் பெற்றுள்ளன.
இது தொடர்பில் கடந்த ஏப்ரல் மாதம் அரசியலமைப்பின் 131ஆவது திருத்த மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026 மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா 2026 ஆகிய மூன்று மசோதாக்கள் மக்களவையில் முன்வைக்கப்பட்டிருந்தன.
எனினும், அரசியலமைப்புத் திருத்த மசோதாவுக்கு தேவையான பெரும்பான்மை ஆதரவு கிடைக்காததால் அது தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து ஏனைய இரண்டு மசோதாக்களையும் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.
2023ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டத்தின் நடைமுறைப்படுத்தல், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறையுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 13ஆம் திகதி நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
எனினும், குடியரசுத் தலைவரால் கூட்டத்தொடர் முறைப்படி நிறைவுக்குக் கொண்டுவரப்படாத நிலையில், எதிர்வரும் அமர்வுகள் மழைக்காலக் கூட்டத்தொடரின் தொடர்ச்சியாகவே நடைபெறவுள்ளன.
மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்களை மீண்டும் முன்வைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும், கூட்டத்தொடருக்கான உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரல் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதுடில்லியில் இன்று (27) பிற்பகல் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டமும் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளில் கட்சி முன்னெடுக்க வேண்டிய அரசியல் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
543 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய மக்களவையில் மூன்று ஆசனங்கள் வெற்றிடமாகவுள்ள நிலையில், தற்போது 540 உறுப்பினர்கள் உள்ளனர்.
அனைத்து உறுப்பினர்களும் வாக்களிக்கும் நிலையில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு 360 வாக்குகள் தேவைப்படும்.
இந்திய அரசியலமைப்பின் 368ஆவது உறுப்புரையின்படி, அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு ஒவ்வொரு அவையினதும் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் பெரும்பான்மை ஆதரவும், அமர்வில் கலந்துகொண்டு வாக்களிக்கும் உறுப்பினர்களில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு ஆதரவும் அவசியமாகும்.
இதனால், வாக்கெடுப்பில் பங்கேற்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான வாக்குகளின் எண்ணிக்கையும் மாறுபடக்கூடும்.
ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மேலதிகமாக ஏனைய அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
245 ஆசனங்களைக் கொண்ட மாநிலங்களவையிலும் அரசியலமைப்புத் திருத்தத்திற்குத் தேவையான விசேட பெரும்பான்மை ஆதவைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் அரசியல் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.
திராவிட முன்னேற்றக் கழகம், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பிராந்தியக் கட்சிகளின் நிலைப்பாடுகளும் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளில் முக்கியத்துவம் பெறவுள்ளன.
மகளிர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான காலப்பகுதி மற்றும் தொகுதி மறுவரையறையால் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் தொடர்பில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.
மசோதாக்கள் மீண்டும் தாக்கல் செய்யப்படுமா என்பது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகின்றது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.