தமிழக அரச ஊழியர்களுக்கு 15 நாட்கள் தந்தையர் மகப்பேற்று விடுமுறை: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
குழந்தைப் பிறப்பின்போது தாய்க்கு ஆதரவளிப்பதற்கும் குழந்தை பராமரிப்பில் தந்தையின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதற்கும் தமிழக அரச சேவையில் பணியாற்றும் திருமணமான ஆண் ஊழியர்களுக்கு 15 நாட்கள் தந்தையர் மகப்பேற்று விடுமுறை வழங்கப்படவுள்ளது.
தமிழகத்தில் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்படும் இந்த விடுமுறைத் திட்டம் தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசாங்கம் நேற்று (26) வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, அரச சேவையில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு ஏற்கனவே 365 நாட்கள் மகப்பேற்று விடுமுறை வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், ஆண் அரச ஊழியர்களுக்கும் தந்தையர் மகப்பேற்று விடுமுறை வழங்குமாறு அரச ஊழியர்களிடமிருந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கையைப் பரிசீலித்த அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
திருமணமான ஆண் அரச ஊழியர்கள் தமது மனைவியின் மகப்பேற்றுக் காலத்தில் உடனிருந்து உதவுவதற்கு ஏதுவாக 15 நாட்கள் விடுமுறை வழங்கப்படவுள்ளது.
குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்னரிருந்தோ அல்லது குழந்தை பிறந்த திகதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள்ளோ இந்த விடுமுறையைப் பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்கத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைப் பிறப்பை அண்மித்த காலப்பகுதி தாய் மற்றும் குழந்தையின் நலனைப் பொறுத்தவரையில் முக்கியமானதாகும்.
இக்காலப்பகுதியில் தாய்க்கு உடல் மற்றும் உளரீதியான ஆதரவை வழங்குவதுடன், புதிதாகப் பிறந்த குழந்தையைப் பராமரிப்பதிலும் தந்தையின் பங்களிப்பு அவசியமானது என தமிழக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
குடும்பப் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வதற்கும் குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதற்கும் இந்த விடுமுறை உதவியாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசாங்கத்தின் இந்த அறிவிப்புக்கு அரச ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களும் தந்தையர் மகப்பேற்று விடுமுறை வழங்கும் தீர்மானத்தை வரவேற்றுள்ளன.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.