எல் நினோ காலநிலை மாற்றத்தால் இறக்குமதி உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கக்கூடும்: வர்த்தக அமைச்சர் அதிர்ச்சி தகவல்
எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக இந்தியாவில் நிலவும் சீரற்ற வானிலையால், சில இறக்குமதி உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களைத் தடையின்றி விநியோகிப்பதற்காக மாற்றுச் சந்தைகளை ஆராய இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் இறக்குமதியாளர்களுடன் அமைச்சில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
இதன்போது, காய்ந்த மிளகாய் தவிர்ந்த ஏனைய அனைத்து இறக்குமதிப் பொருட்களையும் எவ்விதத் தடையுமின்றி உள்ளூர் சந்தைக்கு விநியோகிக்க முடியும் என இறக்குமதியாளர்கள் அரசாங்கத்திற்கு உறுதியளித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
காய்ந்த மிளகாய் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து விளக்கமளித்த அமைச்சர், இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படும் சில கப்பல் சரக்குகளில் ஈரப்பதன் அதிகமாகக் காணப்படுவதே இதற்கான பிரதான காரணம் எனத் தெரிவித்தார்.

இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் உணவுப் பாதுகாப்புத் தேவைகளுக்கு அமைய, இறக்குமதி செய்யப்படும் காய்ந்த மிளகாயின் ஈரப்பதன் 12 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் மாத்திரமே அவற்றை விடுவிக்க முடியும். ஆனால், இந்தியாவில் நிலவும் கடும் மழை மற்றும் எல் நினோ காலநிலை காரணமாக சில சரக்குகளில் ஈரப்பதன் 13 முதல் 14 சதவீதம் வரை பதிவாகியுள்ளமையால் அவற்றை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சந்தையில் காய்ந்த மிளகாய்க்கு உண்மையான தட்டுப்பாடு எதுவும் ஏற்படவில்லை எனவும், தரம் மற்றும் பாதுகாப்புத் தரநிலைகளைப் பேண வேண்டிய அவசியத்தின் காரணமாகவே சரக்குகளை விடுவிப்பதில் இந்தச் சிக்கல் எழுந்துள்ளதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
இதே வானிலை தொடருமானால் எதிர்வரும் காலங்களில் கொண்டுவரப்படும் கப்பல் சரக்குகளும் பாதிக்கப்படக்கூடும் என்பதால், எதிர்வரும் மார்ச் மாதம் வரை அமுலில் இருக்கக்கூடிய இடைக்காலப் பொறிமுறையொன்றை உருவாக்குவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துமாறு இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, விநியோகத் தாமதங்களைச் சாதகமாகப் பயன்படுத்தி வர்த்தகர்கள் நியாயமற்ற முறையில் விலைகளை அதிகரிக்க முயன்றால் அரசாங்கம் தலையிடும் என அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரித்துள்ளார். சந்தையின் கேள்வி மற்றும் நிரம்பலுக்கு ஏற்ப விலைகள் தீர்மானிக்கப்பட வேண்டும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்ற போதிலும், நுகர்வோரைச் சுரண்டும் வகையில் செயற்படும் வர்த்தகர்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் நுகர்வோர் சேவைகள் சபை ஊடாகக் கட்டுப்பாட்டு விலைகளை விதிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.