ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய நெருக்கடிகளுக்கு மைத்திரிபால சிறிசேனவும் பசில் ராஜபக்ஷவுமே காரணம் - துமிந்த திசாநாயக்க குற்றச்சாட்டு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேனவே பிரதான காரணம் எனத் தெரிவித்த கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான துமிந்த திசாநாயக்க, அதற்கு பசில் ராஜபக்ஷவின் தூண்டுதலும் ஒரு முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால நகர்வுகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சுதந்திரக் கட்சிக்கு எதிரான 21 நீதிமன்ற வழக்குகளில் தற்போது 20 வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும், தயாசிறி ஜயசேகர தொடர்பான ஒரு வழக்கு மட்டுமே தற்போது நிலுவையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கட்சியின் புதிய தலைவராக நிமல் சிறிபால டி சில்வாவும், பொதுச்செயலாளராகத் தானும், தேசிய அமைப்பாளராக சாமர சம்பத்தும் தற்போது செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேனவே கட்சியின் அனைத்துச் சிக்கல்களுக்கும் பிரதான காரணமாவார் எனத் தெரிவித்த துமிந்த திசாநாயக்க, விஜயதாச ராஜபக்ஷவைத் தலைவராக்கியது, 52 நாள் ஆட்சிக்காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கியது மற்றும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை எதிர்க்கட்சியில் அமர அனுமதித்தது போன்ற தவறான தீர்மானங்களை அவர் எடுத்ததாகக் குற்றம் சாட்டினார். பசில் ராஜபக்ஷவின் தூண்டுதலாலேயே மைத்திரிபால சிறிசேன இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்தி மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுன கட்சியை உருவாக்கியதன் மூலம் சுதந்திரக் கட்சிக்கு பாரிய பின்னடைவு ஏற்பட்டதாகத் தெரிவித்த அவர், 2015 மற்றும் அதற்கடுத்த காலங்களில் சுதந்திரக் கட்சியின் அரசியல் தீர்மானங்களில் பசில் ராஜபக்ஷவின் செல்வாக்கு இருந்ததாகவும், அப்போது அவர் ஜனாதிபதியையும் தாண்டிச் செயற்பட்டு கட்சியின் சிரேஷ்ட தலைவர்களைப் புறக்கணித்ததாகவும் தெரிவித்தார்.
அவரால் இன்று கட்சியின் உறுப்பினர்கள் சிலர் சிறைக்குச் செல்ல நேரிட்டுள்ளதாகவும், கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாக்கத்தில் பசில் ராஜபக்ஷவை இணைத்துக்கொண்டது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார். இந்த நிலைமைக்குக் காரணமான பசில் ராஜபக்ஷவை வெளிநாட்டிலிருந்து வரவழைத்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
2022 இல் நாடு பொருளாதார ரீதியில் முடங்கியபோது, நாட்டின் நலனைக் கருதியே அனுபவமிக்க ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளித்ததாகத் தெரிவித்த அவர், சுதந்திரக் கட்சியிலிருந்து விலகித் தற்காலிகமாக வேறு கட்சிகளுக்குச் சென்றவர்கள் மீண்டும் சுதந்திரக் கட்சியின் கை சின்னத்தின் கீழ் தாய் வீட்டிற்குத் திரும்புவார்கள் என்றார். எதிர்வரும் காலத்தில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து நாட்டின் எதிர்காலத்திற்காக புதிய அரசியல் கொள்கையுடன் செயற்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய ஆட்சியாளர்கள் 70 ஆண்டுகால ஆட்சியில் என்ன நடந்தது எனக் கேள்வி எழுப்புவதைச் சுட்டிக்காட்டிய துமிந்த திசாநாயக்க, அந்த 70 ஆண்டுகளில் கட்டியெழுப்பப்பட்ட பாடசாலைகள், மருத்துவமனைகள், மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் வசதிகளை அனுபவித்துக்கொண்டே அவர்கள் இக்கேள்வியைக் கேட்பதாக விமர்சித்தார்.
மின்சாரக் கட்டணம் குறைப்பு, எரிபொருளை இறக்குமதி விலையிலேயே வழங்குதல், வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 25,000 ரூபா கொடுப்பனவு போன்ற நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கி மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஜே.வி.பி.யின் கடந்த கால கசப்பான வரலாற்றை மறைப்பதற்காக, பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்டோரை முன்நிறுத்தி திசைகாட்டி எனும் ஐசிங் பூசப்பட்ட கேக் போன்று அரசாங்கம் மக்களை ஏமாற்றியுள்ளதாகத் தெரிவித்த அவர், உகாண்டாவிலிருந்து திருடப்பட்ட பணத்தை இரண்டு விமானங்களில் கொண்டுவருவதாக மேடைகளில் பிரசாரம் செய்த போலிப் பிரசாரங்கள் தற்போது முற்றாக அம்பலமாகியுள்ளன என்றார்.
இன்று நாட்டின் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் வீதியில் இறங்கிப் போராடி வருவது எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் அல்ல, மாறாக அரசாங்கத்தின் ஏமாற்றத்தையும் பொருளாதாரச் சுமையையும் தாங்க முடியாமலேயே ஆகும் எனத் தெரிவித்த அவர், இவ்வாறான நிலை தொடர்ந்தால் புதுவருடத்தைக் கொண்டாட முடியாத நிலை ஏற்படுவதுடன், அரசாங்கத்தில் உள்ளவர்கள் வீதியில் இறங்கி நடமாட முடியாத சூழல் உருவாகும் எனவும் எச்சரித்தார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.