எரிபொருள் விலை உயர்வின் முழுச் சுமையும் மக்கள் மீது சுமத்தப்படாது: ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்ந்தாலும் அதன் சுமை மக்கள் மீது சுமத்தப்படாது என்றும், 3 மாத நிவாரணத்திற்காக 4100 கோடி ரூபா ஒதுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை உயர்வின் முழுச் சுமையும் மக்கள் மீது சுமத்தப்படாது: ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
ADVERTISEMENT
ADVERTISEMENT

உலகச் சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மையால் எரிபொருள் விலை உயர்ந்தாலும், அதன் ஒட்டுமொத்தச் சுமையையும் பொதுமக்கள் மீது சுமத்தப்போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மூன்று மாதங்களுக்கான எரிபொருள் நிவாரணத்திற்காக 4,100 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கம்பஹாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொருளாதார முன்னேற்றத்தின் முழுமையான நன்மைகளையும் மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதே தமது நோக்கம் என்றும், ஐயாயிரம் ரூபாவை வழங்கி நிவாரணம் அளிக்கும் தற்காலிகக் கலாசாரத்தைத் தொடரப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

நிலையான பொருளாதார முன்னேற்றம் மற்றும் அபிவிருத்திகள் மூலமே மக்களுக்கு நிரந்தர நிவாரணங்கள் வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பூகோளக் காரணிகளினால் உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் தொடர்ந்து நிலையற்றதாகவே காணப்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, கடந்த ஆறு மாதங்களாகத் திறைசேரி ஊடாக எரிபொருள் விலைக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாகவும், நிர்ணயிக்கப்பட்ட தொகையின் ஒரு பகுதியை அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில் உலகச் சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் உயர்வடையும் சாத்தியம் தென்பட்டாலும், மக்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசெம்பர் ஆகிய மூன்று மாத காலப்பகுதிக்கான எரிபொருள் நிவாரணத்திற்காக 4,100 கோடி ரூபாவை ஒதுக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான அமைச்சரவைப் பத்திரம் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT