அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை விவகாரம்: சவூதி மன்னருக்கு ஜனாதிபதி அநுர கடிதம்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த அனோஜன் சிவராசாவிற்கு மன்னிப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சவூதி மன்னருக்கு விரைவில் விசேட கடிதமொன்று அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன், ஜனாதிபதியின் விசேட குழுவொன்றும் அங்கு செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் அந்தக் கடிதத்தை சவூதி மன்னரிடம் நேரில் கையளிப்பதற்காக பிரதி சபாநாயகர் தலைமையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று சவூதி அரேபியாவுக்கு பயணிக்க வேண்டும் என்ற யோசனையையும் அவர் முன்வைத்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று வெளிவிவகார அமைச்சின் விசேட அறிவித்தலை வெளியிட்டு உரையாற்றியபோதே அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரின் போது, சவூதி வெளிவிவகார அமைச்சரை நேரில் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். மரண தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டுகோள் விடுப்பது, மன்னிப்புக் கோருவது மற்றும் தண்டனையைக் குறைப்பது உள்ளிட்ட விடயங்களில் சவூதியின் சட்டக் கட்டமைப்பிற்கு அமைய சாத்தியமான அனைத்துப் பொருத்தமான சலுகைகளையும் பெற்றுக்கொள்ள உரிய இராஜதந்திர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த விவகாரத்தின் உணர்வுபூர்வ நிலைகளைக் கருத்திற்கொண்டு அனைத்துத் தரப்பினரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும், இராஜதந்திர ரீதியான நகர்வுகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் விடயங்களைத் தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
1999 டிசம்பர் 20ஆம் திகதி பிறந்த அனோஜன் சிவராசா, தொழில் நிமித்தம் 2025 செப்டம்பர் 4ஆம் திகதி சவூதி அரேபியாவுக்குச் சென்று வெனிஸ் அரேபியா நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். முகநூலில் அவர் பதிவிட்ட கருத்தொன்றினால் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து, அவரை நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கு உதவுமாறு குடும்பத்தினர் ஜூலை 1ஆம் திகதி வெளிவிவகார அமைச்சிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்தனர்.
அமைச்சின் பணிப்புரைக்கமைய ரியாத்திலுள்ள இலங்கை தூதரகம் அந்நிறுவனத்திடம் விளக்கம் கோரியதுடன் அவரை விரைவாக மீட்க உதவுமாறும் கோரியது. எனினும், சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட மத ரீதியிலான கருத்தால் சவூதியின் சைபர் குற்றம் மற்றும் மத நிந்தனைச் சட்டம் மீறப்பட்டதாகத் தெரிவித்து ஜூலை 2ஆம் திகதி சவூதி பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டதாக நிறுவனத்தின் மனிதவள முகாமையாளர் தூதரகத்திற்கு அறிவித்துள்ளார்.
ஜூலை 26ஆம் திகதி நிகழ்நிலை தொழில்நுட்பம் ஊடாக நடைபெற்ற ஆரம்ப நீதிமன்ற விசாரணையில், அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஷரியா சட்டத்தின் கீழ் மரண தண்டனை கோரிய போதிலும், நீதிமன்றம் சைபர் குற்றவியல் சட்டத்தின் கீழ் அவருக்கு ஐந்து வருட சிறைத் தண்டனையும் மூன்று மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதித்து, குறிப்பிட்ட இலத்திரனியல் சாதனத்தை அரசுடமையாக்கவும் சமூக வலைத்தளப் பக்கத்தை முடக்கவும் தீர்ப்பளித்தது.
விசாரணைகளின் போது அனோஜன் தமது செயலுக்குப் பாவமன்னிப்புக் கோரி தவறை ஒப்புக்கொண்டிருந்தார். பின்னர் இலங்கை தூதரகத்தின் ஊடாக தண்டனையைக் குறைக்கக் கோரி மேன்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அரசு வழக்கறிஞர் தரப்பினால் தண்டனையை அதிகரிக்கக் கோரி எதிர் மேன்முறையீடு செய்யப்பட்டது. செப்டம்பர் 17ஆம் திகதி வழக்கை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், கீழ் நீதிமன்றத் தீர்ப்பை மாற்றி, நபிகளை அவமதித்ததாக ஷரியா சட்டத்தின் கீழ் அனோஜன் சிவராசாவிற்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
மரண தண்டனைத் தீர்ப்பு தொடர்பில் தற்போது விசேட மீளாய்வு முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சவூதி மற்றும் இலங்கை சட்ட நிபுணர்களின் ஆலோசனைகளுடன் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் இராஜதந்திர மற்றும் சட்ட வழிகளில் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. தூதரக அதிகாரிகள் அனோஜனுடன் நேரடித் தொடர்புகளைப் பேணி வருவதுடன், சவூதி உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் ஆராயப்பட்டு வருகின்றன.
மேலும், ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமரபெரும மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் தமது சொந்த செலவில் சவூதி அரேபியா சென்று அந்நாட்டு சட்டத்தரணிகள் குழுவுடன் கலந்தாலோசித்துத் தேவையான சட்ட உதவிகளை வழங்கவுள்ளனர். அனோஜன் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளமையால், இந்நடவடிக்கைகளுக்கான முழுச் செலவுகளையும் அரசாங்கமே பொறுப்பேற்கும் எனவும் அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தினார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.